September 24, 2007

ராமர் பாலத்தை வைத்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக திட்டம்!

போபால்:ராமர் பாலப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீர்மானித்துள்ளது. குறிப்பாக ராமர் பாலத்தை தனது முக்கிய அஸ்திரமாக பாஜக தீர்மானித்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், நடந்து வந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை பாஜக எடுத்துள்ளது. அதில் முக்கியமானது எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமர் பாலப் பிரச்சினைய முக்கியப் பிரச்சினையாக வைத்து, காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்து, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீர்மானித்துள்ளது.தற்போது பாஜக வசம் உள்ள எம்.பி தொகுதிகளை தக்க வைத்துக் கொள்வது போக, காங்கிரஸ் கூட்டணி வசம் உள்ள எம்.பி. தொகுதிகளில் கணிசமானவற்றை கைப்பற்றவும் பாஜக தீர்மானித்துள்ளது.ராமர் பாலத்தை தங்ளது தேர்தல் பிரசாரத்தில் முக்கியப் பிரச்சினையாக வைக்க பாஜக தீர்மானித்துள்ளது. இதுதவிர அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பிரச்சினைகளையும் முக்கியமாக கையில் எடுக்கத் தீர்மானித்துள்ளது பாஜக.அதற்கு முன்பாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள குஜராத் சட்டசபைத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து வரவுள்ள ஹிமாச்சல் பிரதேச சட்டசபைத் தேர்தலிலும் வெற்றியைக் குவிக்கவும் பாஜக முடிவெடுத்துள்ளது.ராமர் பாலத்தைப் பொறுத்தவரை, ராமேஸ்வரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராமர் பால பாதுகாப்பு இயக்கத்திற்கு முழு ஆதரவு தந்து அந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. நேரடியாக ஈடுபடாமல் இந்த இயக்கத்திற்கு பாஜக ஆதரவு தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.ராமர் பாலத்தைக் காக்க அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் பாஜக இறங்கும். அதேசமயம், நேரடியாக எந்தப் போராட்டத்திலும் அது ஈடுபடாது.கூட்டத்தின் நிறைவில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரு கட்சியால் (திமுக) நாடு பெரும் ஆபத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.தமிழகத்தில் பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் காயமடைந்துள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் பேசி, தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.கருத்துக்களைத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அதேசமயம், அடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்த யாருக்கும் அதிகாரம் இல்ைல என்று பாட்டீலிடம், அத்வானி கூறியுள்ளார்.ஆங்கிலேய ஆட்சியின்போது கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையை இணைக்க தீர்மானித்னர். ஆனால் அப்போது கூட ராமர் பாலத்தை தொட அவர்கள் முடிவு செய்யவில்லை. அந்தத் தைரியம் அவர்களுக்கு இல்லை. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள், பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளைக் கொஞ்சம் கூட மதிக்காமல், சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை மட்டும் மனதில் கொண்டு ராமர் பாலத்தை இடிக்க முயலுகின்றனர்.பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீவிரவாதம், தீவிரவாதிகளின் ஊடுறுவல் ஆகிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வங்கதேசத்திலிருந்து அதிக அளவிலான தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுறுவி வருவது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது.பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது தீவிரவாதத் தடுப்புக்கென தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்றார் ராஜ்நாத் சிங்.

0 comments: