October 21, 2007

கப்பலில் வந்த கழிவுகள்

கப்பலில் வந்த மூன்று கன்டெய்னர்களில் 65 டன் கழிவுகள் இருப்பதை கேரள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து அங்குள்ள நகராட்சி மற்றும் மருத்துவமனை கழிவுகள் அடங்கிய 3 கன்டெய்னர்கள் கப்பலில் கேரளத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், ‘இந்தியாவை கழிவுகள் கொட்டுமிடமாக’ மாற்றவேண்டாம் என்று அமெரிக்காவை எச்சரிக்கை செய்துள்ளார்.

சரக்கு போல அங்கிருந்து கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகள் கேரளத்தில் மறுசுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்ய அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. “இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கப்பலில் கழிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு கேரள சுகாதாரத் துறை அமைச்சரை கேட்டுள்ளேன். அப்படி உண்மையாக இருக்கும் பட்சத்தில் இப்பிரச்னை குறித்து உயர்நிலை அளவில் கொண்டு செல்லப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

நியூயார்க் நகரிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள், பிளாஸ்டிக், மக்கும் தன்மையுடைய பொருள்கள், மருத்துவமனை கழிவுகள், அறுவைச் சிசிக்சைக்குப் பயன்படுத்தப்படும் கையுறைகள், நாப்கின்கள் ஆகிய தடைசெய்யப்பட்ட பொருள்கள் கண்டெய்னரில் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மூன்று கன்டெய்னர்களையும் வந்த இடத்துக்கே திரும்பி அனுப்புமாறு சுங்க துறையிடம் கேரள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் குறித்து கேரள சுகாதாரத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. “தொழில்மயமான நாடுகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளை குப்பைகள், கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றும் முயற்சி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து வந்த கப்பலில் 12 கன்டெய்னர்களில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.

கழிவுகள் அடங்கிய கன்டெய்னர்கள் கேரளத்துக்கு குறிப்பாக கொச்சிக்கு அடிக்கடி கப்பல்களில் வருவதாக வந்த தகவலையடுத்து சுங்க அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காகிதக் கழிவுகள் என்ற பெயரில் வரும் கன்டெய்னர்களில் நோய்களை உண்டாக்கும் கழிவுகள் கொண்டுவரப்படுகிறது. அவைகளை மறுசுழற்சி செய்வதற்காக கொச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. காகித கழிவுகளுடன் பிளாஸ்டிக் கழிவுகள், மக்கும் தன்மையுள்ள உணவுப் பொருள்கள், கண்ணாடி துகள்கள், கம்ப்யூட்டர் உதிரிப் பொருள்கள் ஆகியவை கண்டெய்னரில் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக” கேரள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஜி.ராஜ்மோகன் தெரிவித்தார்.

நன்றி: தினமணி

0 comments: