September 25, 2007

அக். 1ம் தேதி பந்த் - திமுக கூட்டணி முடிவு வேதாந்தியைக் கைது செய்ய கோரிக்கை.

அக். 1ம் தேதி பந்த் - திமுக கூட்டணி முடிவு வேதாந்தியைக் கைது செய்ய கோரிக்கை.

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007

சென்னை:சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்து நிறுத்த முயலும் பாஜகவைக் கண்டித்தும், விரைவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், அக்டோபர் 1ம் தேதி தமிழகத்தில் பந்த் நடத்த திமுக கூட்டணி தீர்மானித்துள்ளது. வேதாந்தி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அது மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் நடந்தது. சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் சில முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அவை வருமாறு:- முதல்வர் கருணாநிதியின் தலையைக் கொய்து வருவோருக்குப் பரிசு என்று கூறிய மத வெறிப் பேச்சால், முதல்வரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் நாட்டு மக்கள் உள்ளனர். அத்தகைய அக்கிரமமான, மத வெறியைத் தூண்டும் வகையில் பேசியவர் மீது கிரிமினல் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.- சேது சமுத்திரத் திட்டத்தால் ஏற்படும் பொருளாதார பலன்களைத் தடுத்து நிறுத்த முயலும் பாஜக, வி.எச்.பி. போன்ற மதவாத சக்திகளின் உள்நோக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையிலும், இந்தத் திட்டத்தை திட்டமிட்டபடி , எந்தவித தடையும் இன்றி நிறைவேற்றக் கோரியும் அக்டோபர் 1ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும். அதற்கு முதல் நாள் செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில், திமுக சார்பில் அன்பழகன், கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பொருளாளர் சுதர்சனம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, தி.க. தலைவர் கி.வீரமணி, சிபிஎம் செயலாளர் வரதராஜன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், போட்டி மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுச் செயலாளர் ஹக்கீம் சையத் சத்தார், புரட்சி பாரத தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

0 comments: