September 28, 2007

லஞ்சம் வாங்குகிறார்கள் - ஊழல் நடக்கிறது' 'பப்ளி'க்காக ஒப்புக் கொண்ட திமுக எம்.எல்.ஏ!!

'லஞ்சம் வாங்குகிறார்கள் - ஊழல் நடக்கிறது' 'பப்ளி'க்காக ஒப்புக் கொண்ட திமுக எம்.எல்.ஏ!!

சென்னை:அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குகிறார்கள், ஊழல் நடக்கிறது என்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ரங்கநாதன் பட்டவர்த்தனமாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை புறநகரான அம்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள கிணறுகளிலிருந்து தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான லாரிகள், சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டதாகவும், அம்பத்தூர் ஏரியே வறண்டு போய் விட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.இதைத் தடுத்து நிறுத்தக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லாததால் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.30க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் சாலை மறியல் போராட்டத்தை நேற்று நடத்தின. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆயப்பாக்கம் செல்லும் சாலையில் இவர்கள் போராட்டத்தில் குதித்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.பின்னர் அம்பத்தூர் தாலுகா அலுவலகம் நோக்கி அனைவரும் ஊர்வலமாக சென்றனர். ஆனால் போலீஸார் தலையிட்டு அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.போராட்டம் குறித்து அறிந்ததும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டபிள்யூ.ஆர். வரதராஜன் ஆகியோர் அங்கு வந்து மக்களிடம் அவர்களின் பிரச்சினை குறித்துக் கேட்டனர். பின்னர் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தனர்.இந்த நிலையில் வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ புரசைவாக்கம் ரங்கநாதன் அங்கு வந்தார். அவருடன் அம்பத்தூர் நகராட்சித் தலைவர் சேகர் மற்றும் அதிகாரிகளும் வந்தனர்.கூட்டத்தினரை ரங்கநாதன் சமாதானப்படுத்தினர். எம்.எல்.ஏவைப் பார்த்ததும், அப்பகுதியில் மோசமான நிலையில் இருக்கும் சாலையின் அவலத்தைக் குறித்து பொதுமக்கள் புகார் கூறினர்.அதற்கு எம்.எல்.ஏ சமீபத்தில்தான் இப்பகுதியில் புத்தம் புதிய சாலை போடப்பட்டதாக கூறினார். இதைக் கேட்டதும் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். பொய் சொல்லாதீர்கள். இங்கு சாலை போட்டு பல வருடங்களாகிறது என்று ஆவேசமாக குரல் கொடுத்தனர்.இதைக் கேட்டதும் ரங்கநாதன் நெளிந்தார். பின்னர் அவர் தொடர்ந்து பேசுகையில், சரி சாலை போடவில்லை. அதிகாரிகள் தங்களது பணிகளைச் சரிவர செய்வதில்லை. லஞ்சம் வாங்குகிறார்கள், ஊழல் நடக்கிறது. ஒத்துக் கொள்கிறேன். அரசியல்வாதிகளும்தான் லஞ்சம் வாங்குகிறார்கள்.அதை நான் மறுக்க முடியாது, நீங்களும் மறுக்க முடியாது, தா. பாண்டியனும் மறுக்க முடியாது. ஆனால் அதையெல்லாம் நீங்கள் தட்டி கேட்க வேண்டாமா என்று பேசினார்.அதிகாரிகள், அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் முன்னிலையில் திமுக எம்.எல்.ஏ கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தனது பேச்சின் போக்கை உணர்ந்த ரங்கநாதன் சட்டென சுதாரித்துக் கொண்டு, தனியார் வாட்டர் டேங்கர் லாரிகள் அம்பத்தூர் ஏரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தண்ணீர் எடுப்பதைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.இதையடுத்து எம்.எல்.ஏ.வின் உறுதிமொழியை ஏற்று கிட்டத்தட்ட 2 மணி நேரமாக நடத்தி வந்த சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

0 comments: