September 28, 2007

ஈரான்: 12 பெண்களைக் கற்பழித்த 3 பேருக்கு பொது இடத்தில் தூக்கு!

ஈரான்: 12 பெண்களைக் கற்பழித்த 3 பேருக்கு பொது இடத்தில் தூக்கு!

டெஹ்ரான்:ஈரானில் 12 இளம் பெண்களை கடத்திக், கற்பழித்து, கொள்ளை அடித்த 3 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் திறந்த வெளி விளையாட்டு மைதானத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.ஹாதி ஜபர்தபார், மிர்ஹாதி மிர்தாகி, செய்யத் ஷோஜா மெளஸாசாதே ஆகிய அந்த மூன்று பேரும், 3 ஆண்டுகளுக்கு இந்தக் குற்றங்களைச் செய்யத் தொடங்கினர்.முதலில் பெண்களிடம் நைச்சியமாக பேசிக் கடத்திச் செல்வர். பின்னர் கற்பழித்து விட்டு அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள், பணத்தை கொள்ளையடித்துச் சென்று விடுவர்.இவர்களிடம் சிக்கிய ஒரு பெண், கற்பழிப்பிலிருந்து தப்பிப்பதற்காக பெரும் பணத்தைக் கொடுத்து மீண்டார். அவர் போலீஸில் புகார் கொடுக்கவே போலீஸார் தீவிர வேட்டை நடத்தி அந்த மூன்று பேரையும் கைது செய்தனர். இவர்களது இன்னொரு கூட்டாளியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து நான்கு பேரும் அப்பீல் செய்தனர். அதில் மேற்கண்ட 3 பேரின் அப்பீலும் நிராகரிக்கப்பட்டது.இதையடுத்து வடக்கில் உள்ள பபூல் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டுத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.நான்காவது நபரின் அப்பீல் மனு மீது இன்னும் விசாரணை முடிவடையவில்லை. அவரது மனு நிராகரிக்கப்பட்டால் அவரும் இதுபோலவே பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார் என அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.இவர்களால் கற்பழிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் பல்கலைக்கழக மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.கொலை, கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பெரும்பாலான தண்டனைகள் பொதுமக்கள் முன்னிலையில்தான் நிறைவேற்றப்படும். கடந்த ஜூலை மாதம் முதல் மரண தண்டைன நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 60 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதில் செப்டம்பர் 5ம் தேதி மட்டும் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இதுவரை 210 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

0 comments: