September 21, 2007

ராமாயணம் குறித்து என்னுடன் பொது மேடையில் விவாதிக்க அத்வானி தயாரா?-கருணாநிதி

ராமாயணம் குறித்து என்னுடன் பொது மேடையில் விவாதிக்க அத்வானி தயாரா?-கருணாநிதி
வியாழக்கிழமை, செப்டம்பர் 20, 2007


சென்னை:

ராமர் குறித்து, ராமாயணத்தைப் படைத்த வால்மீகி சொன்னதை விட நான் தவறாக எதையும் சொல்லி விடவில்லை. வால்மீகியின் ராமாயணம் குறித்து பொது மேடையில் என்னுடன் விவாதிக்க அத்வானி தயாரா என்று முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராமர் குறித்து நான் சொன்ன கருத்துக்களில் எந்த மாற்றமும் இல்லை. அதைத் திரும்பப் பெறும் பேச்சுக்கும் இடமில்லை.

ராமாயணத்தைப் படைத்த வால்மீகி சொன்னதை விட நான் தவறாக எதையும் சொல்லி விடவில்லை.

என்னை மன்னிப்பு கேட்கச் சொல்லும் அத்வானி, வால்மீகியின் ராமாயணத்தை முழுமையாக படித்து விட்டு என்னுடன் பொது மேடையில் விவாதம் செய்யத் தயாரா?

சேது சமுத்திரத் திட்டத்தின் நோக்கம் பாலத்தை இடிப்பதல்ல. இந்த திட்டத்தால் தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியா முழுவதும் பலனடையும். செழிப்படையும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

கடந்த நூறு ஆண்டுகளாக கனவாகவே இருந்த இந்தத் திட்டம் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதே எனது விருப்பம். அது பாலத்தை இடித்து முடிந்தாலும் சரி, இடிக்காமல் நிறைவேறினாலும் சரி.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுபவர்களின் நோக்கமும் பாலத்தை இடிக்க வேண்டும் என்பதல்ல. திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம்.

இந்தத் திட்டம் நிறைவேறினால் கப்பல்களின் பயண நேரம் வெகுவாக குறையும், கால விரையம் குறையும், செலவும் குறையும் என்பது நிபுணர்கள், பொருளாதார நிபுணர்களின் கருத்து என்றார் கருணாநிதி.

0 comments: