September 22, 2007

குஜராத் தேர்தலுக்காகவே ராமர் பால பிரச்சனை

குஜராத் தேர்தலுக்காகவே ராமர் பால பிரச்சனை-பாலு, சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007

சென்னை:குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தான் பாஜக இப்போது ராமர் பால பிரச்சனையை கிளப்பி சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட முயல்கிறது என மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவதுசேதுசமுத்திர திட்டப் பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருகின்றன. ராமர் பாலம் என்ற ஒன்று இந்திய வரைபடத்திலேயே இல்லை. சேது கால்வாய் தோண்டப்படும் இடத்தில் ஆதம் பாலம் தான் உள்ளது.பாரதீய ஜனதா ஆட்சியில் உமா பாரதி மத்திய மந்திரியாக இருந்தபோது ஆதம் பாலம் பகுதியில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஆதம் பாலம் என்ற மணல் திட்டு பகுதி 5 லட்சம் முதல் 7 லட்சம் ஆண்டுகளுக்குள் உருவானதாக தெரியவந்து ஆய்வறிக்கையும் வெளியிடப்பட்டது.ஆனால் இப்போது பாரதீய ஜனதாவும் மதவாதிகளும் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ராமர் பாலம் இருப்பதாக கூறி வருகிறார்கள்.சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற 6 வழித் தடங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இப்போது நிறைவேற்றப்படும் 6-வது பாதையை மத்திய சுற்றுச் சூழல்துறை மற்றும் ஏராளமான வல்லுனர்களின் ஆய்வுகளின் அடிப்படையில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்த போது ஏற்றுக்கொண்டது தான்.கடல் வழிப்போக்குவரத்துறை அமைச்சர்களாக இருந்த தம்பிதுரை, திருநாவுக்கரசர், சத்ருகன் சின்கா, கோயல் ஆகியோர் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு துறை வாரியாக ஒப்புதல் அளித்துள்ளனர்.பாஜக ஆட்சியில் வடிவமைத்த திட்டத்தைதான் நாங்கள் செயல்படுத்துகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கோ இதில் இடம்பெற்றுள்ள தலைவர்களுக்கோ எந்த மதத்தினரையும் புண்படுத்தும் எண்ணம் கிடையாது. குறிப்பாக முதல்வர் கருணாநிதி எல்லா மதத்தினரையும் சமமாகவே நடத்தி வருகிறார்.8 ஆண்டுகளாக மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தை பரிசீலித்தபோது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது குஜராத்தில் வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு இந்த திட்டத்தை அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறது பாஜக, அது பலிக்காது.ஆதம் பாலம் மணல் திட்டுகளில் தொடர்ச்சிதான் என்று நாசா ஆய்வு மையம் தெளிவாக சொல்லிவிட்டது. இதே போல் உலகில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் திட்டுகள் காணப்படுகின்றன.இதுவரை சேதுசமுத்திர திட்டப் பணிகளுக்காக ரூ. 600 கோடி செலவிடப்பட்டுள்ளது. மதவாதிகள் பிரச்சினையை கிளப்பும் ஆதம் பாலம் 30,000 மீட்டம் நீளம் உடையது. இதில் 300 மீட்டர் அகலத்துக்குதான் கால்வாய் தோண்ட வேண்டி உள்ளது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கால்வாய் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாரிக்கப்பட்ட மனுவில் சிறு தவறு ஏற்பட்டதை உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு விட்டது. அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் வாதிட்டு இந்த வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம். தமிழர்களின் 147 ஆண்டுகால கனவு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.தேவையில்லாமல் மத பிரச்சினைகளை தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்த பாஜகவும் அதன் அமைப்புகளும் முயற்சிக்கின்றன. வால்மீகி ராமாயாணத்தில் எழுதப்பட்டு இருப்பதைத் தான் முதல்வர் கருணாநிதி சொன்னார். அது தவறா? என்றார் பாலு.

0 comments: