காய்ச்சல் எதிரொலி: ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கு 1 வாரம் விடுமுறை!
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007
சென்னை:சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் காய்ச்சல் பரவி வருவதால் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்திலும், விடுதிகளிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 15 மாணவர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், கரீஷ்மா என்ற மாணவியின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.வட சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு சமீபத்தில் விஷக் காய்ச்சல் பரவியது. இதையடுத்து மாணவ, மாணவியர் 15 பேர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டனர்.இவர்களில் உபி. மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கரீஷ்மாவின் உடல் நிலை மோசமாக உள்ளது. கவலைக்கிடமான நிலையில் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தவிர மேலும் இரு மாணவர்களும் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதனால் மாணவ, மாணவியரிடையே மட்டுமல்லாது ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோரும் பீதியடைந்துள்ளனர்.இந்த விவகாரம் குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரீஷ்மா பிரதான் என்ற மாணவிக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது. அவருக்கு அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படும் என்பதால் அவராகவே மாத்திரை சாப்பிட்டு வந்தார்.இந்த நிலையில் கடந்த 21ம் தேதி அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளைக் காய்ச்சல் வந்திருப்பது தெரிய வந்தது.இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் அவர் இருக்கிறார். இதேபோல துர்கேஷ், ஆஷிஷ் பானர்ஜி ஆகிய இருவரும் கூட அப்பல்லோவில் சேர்க்கப்பட்டனர்.அவர்களில் ஆஷிஷ் பானர்ஜி டிஸ்சார்ஜ் ஆகி விட்டார். துர்கேஷும் டிஸ்சார்ஜ் ஆகவுள்ளார். அவர்களின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதின் பேரிலேயே அப்பல்லோவில் அவர்கள் சேர்க்கப்பட்டனர்.மற்ற மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். விடுதி சுகாதாரமாக இல்லை என்று வந்த புகாரைத் தொடர்ந்து நானே நேரில் சென்று பார்த்தேன்.மாணவர்களுக்கிடையே காய்ச்சல் பரவுவதால் ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மேம்பாட்டுக்காக முதல்வர் கருணாநிதி ரூ. 100 கோடியை ஒதுக்கியுள்ளார். அதில் விடுதி மேம்பாட்டுக்கு மட்டும் ரூ. 25 கோடியை ஒதுக்கியுள்ளோம்.மாணவர் விடுதிகள் நான்கிலும் சுகாதார நடவடிக்கைககள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையை உதாரணமாக எடுத்துக் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், விடுதிகளில் சுகாதார நடவடிக்கையை கவனமுடன் கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் ராமச்சந்திரன்.
September 28, 2007
காய்ச்சல் எதிரொலி: ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கு 1 வாரம் விடுமுறை!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment