September 29, 2007

பாண்டிங் பளார் பேச்சு: பதிலடி தருமா இந்தியா? நாளை முதல் ஒரு நாள் போட்டி

பெங்களூர்: 20-20 உலகக் கோப்பையை வென்றதை பெரிதாக நினைக்கும் இந்திய அணியை தோற்கடிப்போம் என்று கூறியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, இந்தியா நாளை நடைபெறவுள்ள முதல் ஒரு நாள் போட்டியில் தக்க பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.சமீபத்தில் நடைபெற்ற 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று நாடு திரும்பியது. இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் நாளை தொடங்குகிறது.பெங்களூரில் முதல் போட்டி நடக்கிறது. கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவை அதே உத்வேகத்துடன் சந்திக்கத் தயாராக உள்ளனர்.மூத்த வீரர்களான கங்குலி, டிராவிட், ஜாகீர்கான், சச்சின் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு மேலும் பலத்தை அளித்துள்ளது.ஆனால் நேற்று ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகக் கோப்பையை வென்றது நடந்து முடிந்து போன விஷயம். இந்திய வீரர்களின் பலவீனம் எங்களுக்கு தெரியும். குறிப்பாக கங்குலி, டிராவிட், சச்சின் ஆகியோரை அவுட்டாக்குவது எளிது.இந்திய வீரர்களுக்குத்தான் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான எங்களது ரெக்கார்ட் சிறப்பாக உள்ளது. எனவே இந்தியாவுடனான அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தார். இதற்கு ராபின் உத்தப்பா சரியான பதில் அளித்திருந்தார். ஆஸ்திரேலியாவை வெல்வோம் என்று அவர் கூறியிருந்தார்.இந்தப் பின்னணியில், நாளை பெங்களூரில் முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டி மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது.டோணி கேப்டன் பொறுப்பேற்ற பிறகு பங்கேற்கும் முதல் ஒரு நாள் போட்டித் தொடர் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மொத்தம் 7 போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.இந்திய அணி வீரர்கள்: டோணி (கேப்டன்), டிராவிட், சச்சின், கங்குலி, காம்பிர், யுவராஜ்சிங், ராபின் உத்தப்பா, ஜாகீர்கான், இர்பான் பதான், தினேஷ் கார்த்திக், ஹர்பஜன்சிங், ரோகித் சர்மா, ஸ்ரீசாந்த், ஆர்.பி.சிங், ரமேஷ் பவார்.

0 comments: