1. தங்கம் விலை : வியாழன் அதிகாலை 12.45 மணி நிலவரம்
சென்னை : வியாழன் அதிகாலை 12.45 மணி நிலவரப்படி தங்கம் விலை நிலவரம் : சென்னை 10 கிராம் (24 காரட்) : ரூ.9511; 8 கிராம் (22 காரட்) ரூ.6972 ; 1 கிராம் (22 காரட்) : ரூ.871; மும்பை: 10 கிராம் (24 காரட்) : ரூ.9439; 1 கிராம் (22 காரட்) : 864
2. எக்சேஞ்ச் : வியாழன் அதிகாலை 12.45 மணி நிலவரம்
சென்னை : வியாழன் அதிகாலை 12.45 மணி நிலவரப்படி எக்சேஞ்ச் ரேட் (பாங்க் விகிதம்) பின்வருமாறு : ஒரு அமெரிக்க டாலர் : ரூ. 40.20; ஒரு பிரிட்டிஷ் பவுண்ட் : 80.38 ; ஒரு யுரோ : ரூ.56.11 .
3. 20-20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 போட்டி : 18 ரன் வீத்தியாசத்தில் இந்தியா வெற்றி
டர்பன் : 20 - 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சூப்பர் 8 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
4. பெங்களூரூவில் தமிழக பஸ் எரிப்பு : கர்நாடக முதல்வர் வருத்தம்
பெங்களூரு : பெங்களூருவில் தமிழக அரசுக்கு சொந்தமான பஸ் வன்முறை கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டது. தமிழக முதல்வரின் மகள் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கர்நாடக அமைச்சர் பிரகாஷ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
5. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் வங்கிக்கடன் கிடையாது - சீனாவில் அதிரடி
பீஜிங் : சீனாவில் மக்கள் தொகை 130 கோடியை எட்டிய நிலையில், குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை கடுமையாக பின்பற்றி வருகிறது. `வதவத' என்று குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் குடும்பத்திற்கு, எல்லா சலுகைகளும் மறுக்கப்பட்டு வருகின்றன. இப்படி கெடுபிடி செய்ததால் பல மாவட்டங்களில், குழந்தைகள் பிறப்பு குறைந்து வருகிறது. பல குடும்பத்தினரும், ஒரு குழந்தை திட்டத்தை பின்பற்ற முன்வந்துள்ளனர். இவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை அளிக்கவும் சீன அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையிலல் ஒரே ஒரு குழந்தை பெறுவோருக்கு மட்டும் வங்கிக்கடன் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பாங்க் ஆப் சீனா உட்பட சில வங்கிகளுக்கு இது தொடர்பான கடிதத்தை, அரசு குடும்ப கட்டுப்பாட்டுத் துறை அனுப்பியுள்ளது. இந்த திட்டம் விரைவில் அமலாக உள்ளது.
6. சினிமா இயக்குனருக்கு கொலை மிரட்டல் : போலீசில் புகார்
சென்னை : அடிக்கடி போனில் அழைத்து கொலை மிரட்டல் வருவதால் பாதுகாப்பு கோரி, போலீஸ் கமிஷனிடம் திரைப்பட இயக்குனர் சசி புகார் செய்தார். சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டைரக்டர் சசிதரன். தற்போது இவர், நடிகர் ஷ்ரீகாந்த் நடிப்பில் `ம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். சசி சென்னை, எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், `நாகர்கோவிலை சேர்ந்த விக்டர் என்பவர் என்னிடம் துணை இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு கேட்டார். அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாமல் போனது. தினமும் அவர் என்னை அடிக்கடி போனில் அழைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். சில நேரங்களில் ஒரு நாளைக்கு 20 முறைக்கும் மேல் தொல்லை கொடுத்து வருகிறார். எனவே, எனக்கு பாதுகாப்பு வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் தெரிவித்தார்.
7. 20-20 கிரிக்கெட் சூப்பர் 8 போட்டி : தென்ஆப்ரிக்கா வெற்றி
டர்பன் : 20 - 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சூப்பர் 8 தொடரின் முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக பேட் செய்த தென் ஆப்ரிக்கா 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தென்ஆப்ரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
8. அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பு : பா.ஜ., பொதுச்செயலாளர் தகவல்
ஜோத்பூர் : லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க., பொதுச்செயலாளர் கோபிநாத் முண்டே தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதி ராமர் பாலம் பற்றி விமர்சித்திருப்பதை கண்டித்துள்ள முண்டே அடுத்தடுத்த பொதுத்தேர்தல்களில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதில் தவறு இல்லை என்றும் கூறியுள்ளார்.
9. பொள்ளாச்சியில் கைதான வைகோ விடுதலை
பொள்ளாச்சி : மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை பாலக்காடு கோட்டத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொள்ளாச்சி்யில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ, 2 எம்.பி., 4 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 1127 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பொள்ளாச்சியில் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து னவக்கப்பட்டிருந்தனர். இரவு 7 மணிக்கு கைதான வைகோ உள்ளிட்டவர்களை விடுதலை செய்யும்படி உத்தரவு வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
10. ராம் சேது இயக்கத்துக்கு பா.ஜ.க., ஆதரவு
புதுடில்லி : ராமர் பால பிரச்னை தொடர்பாக பா.ஜ., கட்சி போராட்டம் நடத்தாது என தெரிகிறது. எனினும், இந்த பிரச்னையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் ராம் சேது விகாஸ் மஞ்ச் இயக்கத்துக்கு அக்கட்சி ஆதரவளிக்கும். பா.ஜ., கட்சியின் மூன்று நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் போபாலில் நடக்கவுள்ளது. அப்போது, ராமர் பால பிரச்னை குறித்து அக்கட்சி முடிவெடுக்கும். இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ., கட்சியின் மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி, தீர்மானம் ஒன்றை கொண்டு வருவார். சிக்கலான ராமர் பாலம் விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்தே முரளி மனோகர் ஜோஷி தான் கையாண்டு வருகிறார். கடந்த ஆண்டு நடந்த கட்சியின் தேசிய செயற்குழுவில் முரளி மனோகர் ஜோஷி இதுபோன்ற ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ராம் சேது விகாஸ் மஞ்ச் அமைப்பின் தலைவராக கல்யாணராமன் உள்ளார். இவர் உலக வங்கியில் வேலை பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
11. பெங்களூரு தாக்குதல் சம்பவம் : மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கண்டனம்
புதுடில்லி : பெங்களூருவில் நேற்று நள்ளிரவு முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதியுடன், பாட்டீல் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, பெங்களூரு சம்பவம் குறித்து மிகுந்த வருத்தம் தெரிவிப்பதாகவும், மேலும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
12. புதுடில்லியில் அணுசக்தி உயர்மட்ட குழு கூடியது
புதுடில்லி : மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அணுசக்தி உயர்மட்டக்குழு புதுடில்லியில் கூடியது. பரபரப்பான ஹைட் சட்டம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
13. டி.ஆர்.பாலுவை டிஸ்மிஸ் செய்ய பிரதமருக்கு தமிழக பா.ஜ., கோரிக்கை
திருநெல்வேலி : ராமர் பாலம் தொடர்பாக இந்துக்கள் மனம் புண்படும்படியாக நடந்துகொண்ட கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவை, பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என நெல்லையில் நடந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமர்பாலம் விஷயத்தில் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்த காரணமான மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மறுத்தால் அவரை பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14. அத்வானிக்கு கறுப்பு கொடி : தி.மு.க.,மேலிடம் திடீர் தடை
திருநெல்வேலி : நெல்லையில் அத்வானிக்கு கறுப்பு கொடி காட்ட தி.மு.க.,மேலிடம் திடீர் தடை விதித்தது. நெல்லையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க கட்சியின் மூத்த தலைவர் அத்வானி விமானம் மூலம் துாத்துக்குடி வந்தார். பெங்களூருவில் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் வீடு மீது நேற்று முன்தினம்ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெல்லையில் அத்வானி வருகையின் போது அவருக்கு கறுப்பு கொடி காட்ட தி.மு.க.,வினர் முடிவு செய்தனர். இதற்காக தி.மு.க.,பிரமுகர் ஒருவரின் ஏற்பாட்டின்படி தி.மு.க.,வினர் வண்ணார்பேட்டை ரவுண்டானா வழியே அத்வானிவரும்போது கறுப்பு கொடிகாட்ட திட்டமிட்டிருந்தனர். இதுகுறித்து முதல்வர் கருணாநிதிக்கு உளவுத்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அத்வானிக்கு கறுப்பு கொடி காட்டுவது சரியல்ல என அந்த தி.மு.க.,பிரமுகருக்கு தி.மு.க.,மேலிடத்தில் இருந்து உத்தரவுவந்தது.இதனையடுத்து யார் அத்வானிக்கு கறுப்பு கொடிகாட்டுவதாக இருந்ததோ அவரே வண்ணார்பேட்டை வளைவிற்கு வந்து தி.மு.க.,வினர் யாரும் கறுப்புகொடி காட்டாமல் பந்தோபஸ்துபணியில்ஈடுபட்டார். இதனால் போலீசாரும் நிம்மதிபெருமூச்சுவிட்டனர்.
15. ம.தி.மு.க., சார்பில் அடுத்த கட்ட போராட்டம் : வைகோ
பொள்ளாச்சி : மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை பாலக்காடு கோட்டத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டம் நடத்திய ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ உட்பட 1127 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட போது நிருபர்களுக்கு பேட்டியளித்த வைகோ கூறியதாவது; வரும் 25ந் தேதி முதல் 29ம் தேதி வரை பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் நேரடியாக சென்று ரயில்வே கோட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகம், மற்றும் அக்டோபர் 5ம் தேதி பொள்ளாச்சியில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
16. தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதல்வர் கருணாநிதி
சென்னை : கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
17. சேலம் ரயில்வே கோட்டம் நவம்பர் முதல் வாரத்தில் துவக்கம் : அன்புமணி ராமதாஸ்
சென்னை : சேலம் ரயில்வே கோட்டம் வரும் நவம்பர் முதல் வாரத்தில் துவக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். ரயில்வே இணை அமைச்சர் வேலு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இருவரும் முதலமைச்சர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து பேசினர். பின்னர் நிருபர்களிடம் அன்புமணி கூறியதாவது : சேலம் ரயில்வே கோட்டம் நவம்பர் முதல்வாரத்தில் துவக்கப்படும் எனவும் , மேலும், முதல்வர் கருணாநிதி ரயில்வே கோட்டத்தை துவக்கி வைப்பார் எனவும் தெரிவித்தார்.
18. காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் : ராணுவ வீரர் ஒருவர் பலி
ஷ்ரீநகர் : கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள கங்கான் பகுதியில் உள்ள ராணுவ பாதுகாப்பு மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானர், 4 பேர் காயமடைந்தனர்.
19. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் அது கூட்டணிக்கு இழைக்கும் நம்பிக்கை துரோகம் : இ.கம்யூ., செயலர் ராஜா
புதுடில்லி : அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க காங்கிரஸ்- இடதுசாரி கட்சிகளின் உயர்மட்டக்குழு இன்று 3வது முறையாக கூட உள்ளது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் செயலர் ராஜா கூறியதாவது : அணுசக்தி ஒப்பந்தம் குறித்து வியன்னாவில் நடைபெறும் சர்வதேச அணுசக்தி கவுன்சிலின் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால், அது கூட்டணிக்கு இழைக்கும் துரோகம் என தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் - இடதுசாரி கட்சிகளுக்கிடையையான உயர்மட்டக்குழுவை அர்த்தமில்லாமல் போய்விடும் எனவும் தெரிவித்தார். ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில், நடைபெறும் சர்வதேச அணுசக்தி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் கடோட்கர் சென்றுள்ளார். இந்நிலையில், நாளை அணுசக்தி எரிபொருள்களை உலக நாடுகளுக்கு சப்ளை செய்யும் குழு ஒன்று கூடி இந்திய - அமெரிக்கா இடையையான ஒப்பந்தம் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த விவாதத்தில் கடோட்கரும் கலந்து கொள்வார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று காங்கிரஸ் - இடதுசாரிகட்சிகளின் உயர்மட்டக்குழு இன்று கூட உள்ளது.
20. சேலம் அருகே இளம் பெண் 2 குழந்தைகளுடன் தீ வைத்து தற்கொலை
சேலம் : கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 23 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் , தனது 2 குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
21. சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து
சண்டிகார் : புதுடில்லிக்கு சென்று கொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்னோட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. பாடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்த ரயிலில் எதிர்பாரவிதமாக மின்னோட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், தீ விபத்து ஏற்பட்ட உடனேயே பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை.
22. இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மானியக்குழு நாளை ஆலோசனை
வியன்னா : இந்திய - அமெரிக்க நாடுகளுக்கிடையையான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க, அணுசக்தி மானியக்குழு நாளை கூடி முக்கிய ஆலோசனை நடத்துகிறது. ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் அணுசக்தி மாநாடு நடந்து வருகிறது. இந்நிலையில், அணுசக்தி எரிபொருள்களை சப்ளை செய்யும் மானியக்குழு நாளை கூடி இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் குறித்து நாளை கூடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.
23. நெல்லையில் பா.ஜ.,வின் பொதுக்குழு இன்று கூடுகிறது
திருநெல்வேலி : பா.ஜ., கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நெல்லையில் கூடுகிறது. பா.ஜ., தலைவர் அத்வானி இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அத்வானி வருகையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
24. நெல்லையில் கோயில் சிலை உடைப்பால் பரபரப்பு
திருநெல்வேலி : நெல்லையில் கோயில் சிலை உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாளையங்கோட்டையை அடுத்த அடைமிதிப்பான்குளத்தில் உய்காட்டு சுடலை கோயில் உள்ளது. சில விஷமிகள் கோயில் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளதால் இந்து முன்னணி அமைப்பின் பிரமுகர் குமரேசன் போலீசில் புகார் கொடுத்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
25. வியன்னாவில் சர்வதேச அணுசக்தி மாநாடு துவங்கியது
வியன்னா : வியன்னாவில் சர்வதேச அணுசக்தி
மாநாடு இன்று துவங்கியது. வியன்னா சர்வதேச அணுசக்தி மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொள்கிறது. இந்த மாநாட்டில் அணுசக்தி தேவை மற்றும் அணுசக்தி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்தியா சார்பில் அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோர்கர் கலந்து கொள்கிறார். அணுசக்தி மாநாட்டில் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச கூடாது என இடதுசாரிகள் கூறியுள்ளன. இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என மத்திய அரசு உறுதியாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26. அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் அமல் படுத்த வேண்டும் : அமெரிக்க தூதர்
புதுடில்லி : அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் அமல் படுத்த வேண்டும் என அமெரிக்க தூதர் டேவிட் கூறியுள்ளார். இந்தியா அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் வியன்னா மாநாட்டில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச கூடாது மற்றும் 6 மாத காலத்திற்கு அணுசக்தி ஒப்பந்தத்தை அமல் படுத்த கூடாது என இடதுசாரி கட்சிகள் எச்சரித்து வருகின்றன. இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தை காலம் தாழ்த்தாமல் விரைவில் அமல் படுத்த வேண்டும் என இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் டேவிட் வலியுறுத்தியுள்ளார்.
27. பெங்களூருவில் தமிழக அரசு பஸ் மீது தாக்குதல்: 3 பேர் பலி
பெங்களூரு: பெங்களூருவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழக அரசு பஸ்சை வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து கொளுத்தியது. இச்சம்பவத்தில் 3 அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பயணிகளோடு வந்து கொண்டிருந்த பஸ்சை வன்முறை கும்பல் மறித்து தீ வைத்தது. இச்சம்பவத்தில் பஸ்சில் இருந்து மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சங்க பரிவார் அமைப்பினர் பெங்களூருவில் உள்ள அவரது மகள் செல்வி வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் சம்பவம் நடந்த சில மணி நேரத்திற்குப் பின் தமிழக அரசு பஸ் தாக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா செல்லும் அனைத்துத் தமிழகப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
28. ஈராக்கில் குண்டு வெடிப்பு: 3 அமெரிக்க வீரர்கள் பலி
பாக்தாத்: ஈராக்கின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நடந்த குண்டு வெடிப்பில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாயினர். அமெரிக்க வீரர்களைக் குறி வைத்து ஈராக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட 2003 ஆண்டு முதல் தற்போது வரை ஈராக்கில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 3 ஆயிரத்து 786 அமெரிக்க வீரர்கள் பலியாகி உள்ளனர்.
29. மூக்குத்தி அணிந்ததால் பறிபோனது வேலை
லண்டன் : லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் பணியாற்றிய இந்திய பெண் மூக்குத்தி அணிந்து இருந்ததால் அவரது வேலை பறிபோனது. லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் வி.ஐ.பி.,க்கள் தங்கும் இடத்தில் உணவு சப்ளை மற்றும் வாடிக்கையாளர் உறவு பணியில் ஈடுபட்டு வந்தவர் அம்ரித் லால்ஜி(43). இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் மூக்குத்தி அணிந்து இருந்தார். இதற்கு பயணிகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், விமான நிலைய நிர்வாகம் கடந்த மாதம் லால்ஜியை அழைத்து மூக்குத்தியை கழற்றி விட்டு பணிக்கு வரும்படி அறிவுறுத்தியது. ஆனால், லால்ஜி மூக்குத்தியை கழற்ற மறுத்து விட்டார். கடந்த வாரம் அவரிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டு விமான நிலைய நிர்வாகிகள் சரமாரியாகத் திட்டி தீர்த்தனர். இதன் பிறகு லால்ஜி பணிக்கு செல்லவில்லை. இது குறித்து அவர் கூறுகையில்,` இந்து மதத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக மூக்குத்தி அணிந்து வருகிறேன் என்று நிர்வாகத்தினரிடம் ஏற்கனவே தெளிவாக கூறி விட்டேன் என்றார். இது குறித்து விமான நிலைய நிர்வாகத்தினர் கூறுகையில், நகைகளால் பாக்டீரியாக்கள் பரவும். இயந்திரங்களுடன் பணியாற்றும் போதும், உணவு பரிமாறும் போதும் பாக்டீரியாக்கள் பரவும். இதன் காரணமாகவே மூக்குத்தி அணிந்து வர வேண்டாம் எனக் கூறினோம். ஆனால், மூக்குத்தி இல்லாமல் பணிக்கு வர அவர் விரும்பாததால், பணியில் இருந்து அவரை நீக்க வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டு விட்டது' என்றார்.
30. கோட நாடு எஸ்டேட் பிரச்னை இன்று ஆர்.டி.ஓ., விசாரணை
ஊட்டி: கோட நாடு எஸ்டேட்டில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தங்கியுள்ள நிலையில், எஸ்டேட் பிரச்னை தொடர்பாக ஆர்.டி.ஓ., விசாரணை இன்று(19ம் தேதி) குன்னுாரில் நடக்க உள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கோத்தகிரி அருகே கோட நாடு எஸ்டேட்டில், விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க, கடந்த 10ம் தேதி கோட நாடு ஊராட்சி மன்றத் தலைவர் பொன்தோஸ், எஸ்டேட் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, கோட நாடு எஸ்டேட்டுக்கு ஓய்வுக்காக வந்தார். சர்ச்சைக்குரிய எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் திடீர் வருகை காரணமாக, கோட நாடு ஊராட்சி மன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பொன்தோஸ் குற்றம் சாட்டினார்.ஊட்டியில் நிருபர்களிடம் பொன்தோஸ் கூறுகையில், கோட நாடு எஸ்டேட்டில், விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே பணிகள் நடந்துள்ளன. விதி மீறிய கட்டடத்தை இடிக்க, 10ம் தேதி கோட நாடு ஊராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா இங்கு தங்கியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கோட நாடு ஊராட்சியின் சார்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, என்றார். இதற்கிடையே, குன்னுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இன்று(19ம் தேதி) காலை கோட நாடு எஸ்டேட் - அண்ணா நகர் வழி பிரச்னை குறித்த முக்கிய விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையில், கோட நாடு ஊராட்சி தலைவர், நிர்வாக அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
September 19, 2007
சற்றுமுன் உலகம்...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment