September 29, 2007

வெள்ள அபாயம்: அணைகளில் தண்ணீர் திறப்பு

நாகர்கோவில்:பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு அதிக நீர்வரத்து இருப்பதால், இரு அணைகளிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக அணைகளில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து. அணைகளின் நீர் பிடிபபு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது.இதனால் பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த அணைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் தண்ணீர் பாயும் திருவட்டார், குழித்துறை ஆற்றின் கரையோர பகுதிகள், பரளியாறு கரையோர பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று வருவாய் துறையினரால் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.பெருஞ்சாணி அணையில் இருந்து மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பேச்சிபாறை அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.பேச்சிபாறை அணையில் இருந்து வினாடிக்கு 276 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடியும் தண்ணீர் திறத்துவிடப்பட்டுள்ளது. பேச்சிபாறை அணைக்கு 668 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 720 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

0 comments: