September 21, 2007

ஜெவை பார்த்தால் ஹலோ சொல்வேன்-கனிமொழி

ஜெவை பார்த்தால் ஹலோ சொல்வேன்-கனிமொழி
வியாழக்கிழமை, செப்டம்பர் 20, 2007


சென்னை:

அரசியலில் பண்பாடு அவசியம். நான் ஜெயலலிதாவை சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் வணக்கம் சொல்வேன் என்று கூறியுள்ளார் திமுக எம்.பி. கவிஞர் கனிமொழி கருணாநிதி.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கனிமொழி அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். அரசியலை மோசமான உலகம் என்று தான் நினைக்கவில்லை எனவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழியின் பேட்டியிலிருந்து சில துளிகள் ..

நானும் எனது தந்தையும் எப்போதுமே தீவிர அரசியல் பேசிக் கொண்டிருப்பதில்லை. நண்பர்கள் முதல் திரைப்படம், இசை, இலக்கியம் வரை அனைத்தையும் பற்றி பேசுவோம். என் தந்தையை பற்றி தெரிந்தவர்களுக்கு அவரது நகைச்சுவை உணர்வு, திறமை கள் பற்றி தெரியும்.

ஒருநாள் என் தந்தை மிகவும் சோர்வாக, சற்று வருத்தமாக இருந்தார். வீட்டுக்கு வந்த அவருடைய பாதங்கள் வீங்கி இருந்ததைப் பார்த்தேன். உடனே அருகில் சென்று கவலையுடன் பாதங்களைத் தொட்டேன்.

அதற்கு அவர் கவலைப் படாதே வீங்கியுள்ளது பாதம் தான். தலை தான் வீங்கக் கூடாது என்றார்.

அரசியலில் பல ஆண்டுகளாக இருக்கிறார். சிறை சென்றிருக்கிறார். தோல்விகளை பார்த்திருக்கிறோம். எப்போதும் நிலை குலைந்தது இல்லை.

அரசியலை விட்டதும் இல்லை. அவரது அந்த உணர்வைப் பார்த்து நான் வியந்து போகிறேன். சமயம் கிடைத்தால் திருப்பித் தாக்கும் அரசியல்வாதியாகவும் அவர் இருந்ததில்லை.

முன்பெல்லாம் எதிரெதிர் முகாமில் இருந்தாலும் அரசியல் தலைவர்கள் பண்பாடு மாறாமல் நேசத்துடன் இருந்தனர். காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோருடன் இருந்த உறவைப் பற்றி என் தந்தை பேசுவதை கேட்டிருக்கிறேன். மூப்பனார் எங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்த்திருக்கிறேன். பெரியாரும், ராஜாஜியும் கூட அருமையான நட்பு வைத்திருந்தார்கள்.

ஆனால் இப்போது அப்படியா இருக்கிறது. இன்றைய முதல்வரும், முன் னாள் முதல்வரும் `ஹலோ' என்று கூட சொல்லிக் கொள்ள முடிவதில்லை. இதை எனது தந்தை விரும்பவில்லை. அவர் ஆரோக்கியமான அரசியலைப் பார்த்தவர். அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் அவருக்கு தனிப்பட்ட முறையில் நல்ல தொடர்பு உண்டு.

இந்த நிலைமை மாற மறுபுறத்தில் இருப்பவர்களும் தயாராக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஒருவேளை ஜெயலலிதாவை எங்காவது பார்க்க நேர்ந்தால் நிச்சயமாக அவருக்கு வணக்கம் சொல்வேன்.

அரசியலை மோசமான உலகமாக நான் நினைக்கவில்லை. தினசரி நான் பல அரசியல்வாதிகளை சந்திக்கிறேன். எனக்கு நெருக்கமானவர்களும் அரசியலில் இருக்கிறார்கள்.

ஆட்சி எப்படி நடக்கிறது, அரசியல் முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பதற்கு இந்த அனுபவம் புதிய பொருளை அளிக்கிறது. இது ஒரு அற்புதமான அனுபவம். எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

ராஜீவ்காந்தி படுகொலை என் தந்தையை நிச்சயமாக பாதித்தது. அதை அவர் மறக்கவும், மன்னிக்கவும் விரும்புகிறார். இப்போது நாடு எங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. நாங்கள் அவர்களை ஏற்றுக் கொண்டுள்ளோம்.

தேசிய அரசியலிலும், மாநிலங்களைப் பார்ப்பதிலும் திமுகவிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு காலம் தி.மு.க. கூறி வந்ததற்கும், மாநில சுயாட்சிக்கும் இது ஒரு வெற்றியாகும். தற்போது மத்திய அரசில் எங்களுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை ஆரோக்கியமான நிலை என்று கூட சொல்லலாம்.

திடீர் திருப்பங்களால் நான் அரசியலுக்கு வந்ததாக கூற முடியாது. அப்படி ஒரு சூழ்நிலை இல்லாவிட்டாலும் கூட நான் வந்திருப்பேன். திமுகவில் குடும்பம் 2ம் பட்சம்தான். முதலில் கட்சி விசுவாசம்தான் முக்கியம்.

எங்களது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் யாரும் மகிழ்ச்சி அடையவில்லை.

சென்னை விமான நிலையம் நவீனமயமாக்கப்பட வேண்டும். சென்னை நகரம் பெரிதாகி வருகிறது. எனவே அதற்கு ஒரு துணை நகரம் தேவை. இவற்றுக்கெல்லாம் கூட்டணிக் கட்சியிடமிருந்தே எதிர்ப்பு வந்தது. இருந்தாலும் இவை வேண்டாம் என சொல்ல முடியாது. காலத்தின் போக்கில் அது நிச்சயம் வந்தே தீரும் என்றார் கனிமொழி.

0 comments: