December 21, 2008

ஆஸ்திரேலிய விமானங்கள் மோதல்-இந்திய பெண், பயிற்சியாளர் பலி

Chandrika Gaur and Joanne Ethell
மெல்போர்ன்: இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் தம்பதிகளின் 18 வயது மகள் சந்திரிகா கெளர், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு அருகே விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இன்னொரு விமானத்துடன் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தியாவைச் சேர்ந்தவர் சந்திரிகா கெளர். இவரது பெற்றோர் டாக்டர்கள். இந்தியாவில் வசிக்கின்றனர். சந்திரிகா விமான பைலட் பயிற்சிக்காக ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்தார்.

விமானத்தில் பறக்கும் பயிற்சியில் சந்திரிகா ஈடுபட்டிருந்தார். அவருடன் பயிற்சியாளர் ஜோயனா எத்தல் உடன் இருந்தார்.

விமானம் பறந்து கொண்டிருந்தபோது, நடு வானில், இன்னொரு பயிற்சி விமானத்துடன் மோதி விபத்தில் சிக்கியது. அந்த விமானத்தை 89 வயதாகும் கென் ஆன்ட்ரூஸ் என்பவர் செலுத்தினார்.

கென் ஆன்ட்ரூஸ் 2ம் உலகப் போரின்போது பைலட்டாகப் பணியாற்றியவர் ஆவார்.

இந்த விபத்தில் பயிற்சியாளர் ஜோயனா, சந்திரிகா இருவரும் பலியாயினர்.

சந்திரிகா கடந்த சில நாட்களாகவே அதிகம் பறந்து பயிற்சி பெற முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்ததாக அவர் பயிற்சி பெற்று வந்த விமான நிலைய காபி விடுதி உரிமையாளர் எட்டி ஓமெசயா கூறினார்.

அவர் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே தன்னால் அதிகம் பறக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் சந்திரிகா. 

காலையில் காபி சாப்பிட அவர் வந்தபோது, நான் கூட, பேசாமல் கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு செட்டிலாகி விடு என கேலி செய்து கொண்டிருந்தேன்.

சந்திரிகா மிகவும் அருமையான பெண். நல்ல பழக்க வழக்கம் கொண்டவர். நல்ல குடும்பப் பின்னணியைக் கொண்டவர்.

அவருடைய பெற்றோர்கள் டாக்டர்கள். இந்தியாவில் உள்ளனர். சந்திரிகா மிகவும் அமைதியான, மென்மையான பெண். அழகான முகத்துடன் காணப்படுவார். கோபமே வராதவர். 

விமானங்கள் குறைவாக இருந்ததால் அவர் இன்று பறப்பாரா, மாட்டாரா என்பதில் சந்தேகம் இருந்தது. அதிக அளவில் பறக்க முடியவில்லையே என்ற வருத்தமும் சந்திரிகாவிடம் இருந்தது. ஆனால் கடைசியில் விதி விளையாடி விட்டது என்றார் அவர்.

சந்திரிகா பயணித்த செஸ்னா விமானம், காசுலா என்ற இடத்தில் ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீடும் முற்றிலும் சேதமடைந்து விட்டது.

அந்த வீடு ஸ்டீபன் கான்டினா என்பவருக்குச் சொந்தமானது. விபத்து நடந்த நேரத்தில் கான்டினா அலுவலகம் போயிருந்தார். அவருடைய மனைவி பியான்கா வெலரியோவும், பிறந்து ஒரு வாரமே ஆன அவர்களது மகன் எய்டனும், சான்டா கிளாஸுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக வெஸ்ட்பீல்ட் லிவர்பூலுக்குப் போயிருந்தனர். அதனால் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதேபோல கடந்த செப்டம்பர் மாதம் சிட்னி விமானப் பயிற்சி மையத்தில் பயி்ற்சி பெற்று வந்த இந்திய மாணவரான ராகுல் சர்மா என்பவரும் பயிற்சியின்போது உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம்.

அவர் ஓட்டிச் சென்ற விமானம் சிட்னியின் தென் மேற்கில் உள்ள லூத்தன்ஹாம் என்ற இடத்தில் வயலில் விழுந்து நொறுங்கியது.

0 comments: