September 21, 2007

சன் டிவியின் பிற்பகல் செய்தி திடீர் மாற்றம்!

சன் டிவியின் பிற்பகல் செய்தி திடீர் மாற்றம்!
வியாழக்கிழமை, செப்டம்பர் 20, 2007


சென்னை:

சன் டிவியின் வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த சேனல் ஒளிபரப்பி வரும் பிற்பகல் (1.30 மணிச் செய்தி) செய்திகள், ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக 2 மணிக்கு தலைப்புச் செய்திகள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிளையாடல் பாணியில், பிரிக்க முடியாதது எதுவோ என்று கொஞ்ச காலத்திற்கு முன்பு யாராவது கேட்டிருந்தால் சன் டிவியும், திமுகவும் என்றுதான் சொல்லியிருப்பார்கள். அந்த அளவுக்கு இரண்டும் நீக்கமற இணைந்திருந்தனர்.

இந்த நிலையில் மதுரையில் நடந்த மாபெரும் வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து திமுகவுக்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே பெரும் மனக் கசப்பு ஏற்பட்டது, சன் டிவியும், திமுகவும் தனித் தனி வழியில் செல்லத் தொடங்கின.

இதையடுத்து தங்களுக்கென ஒரு டிவி தேவை என்று திமுக தரப்பில் எண்ணம் உருவானது. இதையடுத்து உருவானது கலைஞர் டிவி. கடந்த 15ம் தேதி ஒளிபரப்பைத் தொடங்கியது கலைஞர் டிவி.

கலைஞர் டிவி தனது முழுமையான ஒளிபரப்பைத் தொடங்கியது முதல் சன் டிவி, பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பி வந்த செய்திகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. அடிக்கடி செய்திகள் ஒளிபரப்பாகாமல் ரத்து செய்யப்பட்டன. இதனால் பார்வையாளர்கள் பெரும் குழப்பமடைந்தனர்.

திடீரென செய்திகள் ஒளிபரப்பாகும், திடீரென ஒளிபரப்பாகாது. இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் மக்கள் குழப்பமடைந்தனர்.

ஆனால் சன் டிவி செய்தி வாசிப்பாளர்கள் பலரை கலைஞர் டிவி இழுத்து விட்டதால்தான் செய்தி வாசிப்பாளர்கள் பற்றாக்குறையால் செய்திகள் அடிக்கடி ரத்தானதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல் சன் டிவியின் பிற்பகல் செய்தி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சன் டிவி அறிவித்துள்ளது. 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த முழுமையான செய்தி அறிக்கைக்குப் பதில் இனிமேல் 2 மணிக்கு சன் தலைப்புச் செய்திகள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் டிவியின் வரலாற்றிலேயே முதல் முறையாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த ஒரு நிகழ்ச்சி இப்படி ரத்து செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி வாசிப்பாளர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த பெரும் தலைகள் பலரையும் கூட கலைஞர் டிவி வளைத்துப் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: