September 29, 2007

ஷெரீப் நாடு கடத்தல்: பாக். பிரதமருக்கு சம்மன்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தியது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சவுகத் அஜீஸ் உட்பட 11 பேர் விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 10ம் தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனிலிருந்து நாடு திரும்பினார். ஆனால் அவரை விமான நிலையத்தை விட்டு வெளியேறவிடாமல், வேறொரு விமானத்தில் ஏற்றி சவூதிக்கு மீண்டும் நாடு கடத்தியது முஷாரப் அரசு. இதை எதிர்த்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான நான்கு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் அதைப் புறக்கணித்து விட்டு ஏன் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தினீர்கள் என்று விளக்கம் அளிக்குமாறு கூறி பிரதமர் அஜீஸ், பஞ்சாப் முதல்வர் செளத்ரி பர்வேஸ் இலாஹி உள்ளிட்ட 11 பேருக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற தலைமை நீதிபதி, வழக்கை அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

0 comments: