September 24, 2007

சந்திரிகா-மன்மோகன் ஆலோசனை

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவும் புதுடில்லியில் ஆலோசனை நடத்தியமையானது தமது "ஆட்சியை கவிழ்க்கத்தானா" என்பதை அறிந்து கொள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முனைப்புக் காட்டினார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் வார இதழ் தெரிவித்துள்ளது.சந்திரிகாவின் இந்தியப் பயணம் குறித்து சண்டே ரைம்ஸ் வார இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா இந்தியா சென்றார். முதலில் சென்னையில் சந்திரிகா தங்கினார். சந்திரிகாவின் நெருங்கிய நண்பரும் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக சந்திரிகாவினால் சிறிலங்காவின் தேசிய கௌரவத்தை பெற்றவருமான "இந்து" ஏட்டின் ஆசிரியர் என்.ராமின் விருந்திரான சென்னையில் தங்கினார் சந்திரிகா. அதன் பின்னர் புதுடில்லி செல்ல சந்திரிகா திட்டமிட்டார். சென்னையில் சந்திரிகா இருந்தபோது அவருக்கு ஆச்சரியமடையும் வகையில் இந்தியப் பிரதமர் அலுவலகத்திலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டது. புதுடில்லிக்கு சந்திரிகா சென்றடையும்போது பிரதமர் மன்மோகன்சிங்குடன் பிற்பகல் உணவு விருந்தில் சந்திரிகா பங்கேற்க இயலுமா என்று கேட்கப்பட்டதுதான் அந்த ஆச்சரியம். சந்திரிகாவும் உடனே ஒப்புக் கொண்டார்.அந்த பகல் விருந்தில் முக்கிய பிரமுகர்கள் அணிவகுத்து வந்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பங்கேற்காமையினால் அவரது மகன் ராகுல் காந்தி, வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் இரண்டு கபினட் அமைச்சர்கள் அந்த விருந்தில் கலந்து கொண்டனர். இலங்கை இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதில் மகிந்த அரசாங்கம் தாமதிப்பது, வடக்கு - கிழக்கு பிரிப்பு தொடர்பிலான இந்தியாவின் அதிருப்தி, மனித உரிமைகள் சீர்குலைவுகள் தொடர்பிலான உறுதிமொழிகளுக்கு மாறான சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடு ஆகியவை தொடர்பில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.அப்போது இந்திய அமைச்சர் மணிசங்கர் ஐயரிடம் மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் பேசியுள்ளார். அரசாங்கத்தின் நிலைத்தன்மையை சீர்குலைப்பது தொடர்பாக சந்திரிகாவும் மன்மோகன்சிங்கும் ஆலோசனை நடத்தினார்களா என்பதை கண்டறிவதற்காக மணிசங்கர் ஐயரை மகிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டுள்ளார். கொழும்பில் "இந்து" ஏட்டின் ஆசிரியர் ராம் இருந்தபோது அவரை இரவு விருந்துக்காக மகிந்த ராஜபக்ச அழைத்துள்ளார். மகிந்தவும் ராமும் இரண்டரை மணி நேரம் நடத்திய பேச்சுக்களின் போதும் சந்திரிகாவின் இந்தியப் பயணம் தொடர்பில் பலமுறை மகிந்த கேட்டுள்ளார் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: