20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை: பாக்.கை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!திங்கள்கிழமை, செப்டம்பர் 24, 2007
ஜோஹன்னஸ்பர்க்:தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் இன்று நடந்த 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று இந்தியா புதிய சாதனை படைத்தது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகமே இன்றைய இறுதிப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்தது. காரணம், 20-20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமான பின்னர் நடந்த முதலாவது உலகக் கோப்பைப் போட்டி என்பதால் முதலாவது கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. வழக்கம் போல பேட்டிங்கைத் தேர்வு செய்தார் கேப்டன் டோணி. இந்திய அணியில் வீரேந்திர ஷேவாக் இடம் பெறவில்லை. அவருக்குப் பதில் யூசுப் பதான் சேர்க்கப்பட்டார்.தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டார் யூசுப். அவர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல உத்தப்பாவும், யுவராஜ் சிங்கும் தலா 8 மற்றும் 14 ரன்களில் வீழ்ந்தனர். டோணியும் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.இதனால் இந்திய அணி தடுமாற்றத்தை சந்தித்தது. ஆனால் கவுதம் காம்பிரும், ரோஹித் சர்மாவும் சரிவை தடுத்து நிறுத்தி அசத்தலாக ஆடினர். காம்பிர் அதிரடியாக ஆடி 75 ரன்களைச் சேர்த்தார். ரோஹித் 30 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.ஆட்டநேர முடிவில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.வெற்றிக்கு 158 ரன்கள் தேவை என்ற இலக்கோடு பாகிஸ்தான் களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரரான முகமது ஹபீஸ் 1 ரன்னில் ஆர்.பி.சிங்கின் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார்.அடுத்த களமிறங்கிய கம்ரான் அக்மல் சிறிது நேரத்தில் ஆர்.பி.சிங்கின் 2வது ஓவரில் போல்டாகி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.அதிரடி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த இம்ரான் நசீர் 33 ரன்களில் ரன்அவுட் ஆகினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சோயப்மாலிக், அப்ரிடி என வரிசையாக ஆட்டமிழந்து சென்ற நிலையில் மிஸ்பக் மட்டும் கடைசி வரை நின்று மிரட்டி வந்தார்.கடைசியில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் எடுத்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இர்பான் பதான் 3 விக்கெட்டுகளும், ஆர்.பி.சிங் 3 விக்கெட்டுகளும், ஜோகிந்தர் சர்மா 2 விக்கெட்களும், ஸ்ரீசாந்த் 1 விக்கெட்டும் எடுத்தனர்.16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இர்பான் பதான் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். ஆட்டதொடர் நாயகன் விருது பாகிஸ்தான் அணியின் அப்ரிதிக்கு கிடைத்தது.ஐசிசி நடத்திய முதலாவது 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.இந்திய வீரர்கள் வெற்றிக்குப் பின்னர் கட்டிப் பிடித்துக் கொண்டும், தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி மைதானத்தை வலம் வந்தும் ரசிகர்களுடன் வெற்றியைக் கொண்டாடினர்.உலகெங்கிலும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிககர்கள் பட்டாசுகளை வெடித்தும், ஆர்ப்பரிப்பான ஆரவாரத்துடனும் இந்தியா சாம்பியன் ஆகியதைக் கொண்டாடி வருகின்றனர்.இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் வெற்றி களிப்பு கரைபுரண்டோடுகிறது. தலைநகர் டெல்லி உள்ளிட்ட அனைத்துப் பெருநகரங்களிலும் கொண்டாட்டங்கள் உச்சிக்குச் சென்றுள்ளன.
September 24, 2007
20-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - இந்தியா வெற்றி
டோணிக்குப் புதுப் பெருமை:
20-20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதன் மூலம் இந்திய கேப்டன் டோணி புதிய பெருமை ஒன்றையும் அடைந்துள்ளார்.உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த பெருமைக்குரியவராக கபில்தேவ் மட்டுமே இருந்து வந்தார். 1983ம் ஆண்டு நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பையை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. அதன் பின்னர் நமக்கு அது கனவாகவே இருந்து வருகிறது.இந்த நிலையில் 20-20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று கபிலின் சாதனையை சமன் செய்துள்ளார் டோணி.டெண்டுல்கர், டிராவிட், கங்குலி என ஸ்டார் வீரர்கள் யாரும் இல்லாத நிலையில், இளையவர்களை வைத்துக் கொண்டு அசத்திய டோணி சாம்பியன் பட்டத்தையும் வென்று இந்திய ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இதுவரை நாம், பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை. அந்த வரலாற்றை இன்றும் நிரூபித்து சரித்திர சாதனை படைத்து விட்டது இந்தியா.பிரதமர் வாழ்த்து:20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஆகியுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய அணி சிறப்பாக விளையாடி இந்தியர்களைப் பெருமை கொள்ளச் செய்துள்ளது.இந்த வெற்றி தொடரட்டும். இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியும் இந்த ஆட்டத்தில் மட்டுமல்லாது, தொடர் முழுவதும் சிறப்பாகவே விளையாடியது என்று கூறியுள்ளார்.இன்றைய இறுதிப் போட்டியை மன்மோகன் சிங் தொடக்கம் முதல் ரசித்துப் பார்த்ததாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கங்கிராட்ஸ் இந்தியா!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment