September 24, 2007

எல்லாப்பக்கமும் நாறும் ராமர் பாலம்!

இயற்கையான மணல்திட்டுக்களோ, இறைவன் உருவாக்கிய பாலமோ.. இன்று எல்லாப்பக்கமும் நாறத்தான் செய்கிறது.

சேது சமுத்திரத்திட்டம், எல்லா அரசியல்வாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கு இணையாகவே கொள்கைகளும் கொள்கை மாற்றங்களும் கொண்ட வலைப்பதிவாளர்களுக்கும் பத்துநாளுக்கு மட்டும் சாஸ்வதம் கொண்ட நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது.

ராமர் இருந்தாரா, பாலம் கட்டினாரா, பொறியியல் படித்தாரா, பொறியல் தின்றாரா எனக் கேள்வி கேட்க, திமுக தலைவருக்குத் தகுதி இல்லைதான். டாவின்ஸி கோட் என்ற உப்புப் பெறாத திரைப்படத்தை "மத நம்பிக்கைகள் புண்படக்கூடாது" என்பதற்காகத் தடை செய்த கட்சித் தலைமை, வெளிப்படையாக, தன்னிச்சையாக மத நம்பிக்கைகள் புண்படுமாறு பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

ஆனால், அதே நேரத்தில், புழங்குவதில்லை, தொழுகை நடைபெறுவதில்லை, பல நூற்றாண்டுக்கு முன் கோயிலாக இருந்தது என்று காரணம் காட்டி பாபர் மசூதியை இடித்த மதவாதிகளுக்கும், இப்போது யாரும் புழங்காத, பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக சொல்லப்படும். எந்த பூஜையும் நடைபெறாத ராமர் பாலத்தைக் காக்கும் ஆர்வம் திடீரென வருவதென்ன நியாயம்?

ஒரு ப்ளான்கூட போடப்படாமலா வரைவுத்திட்டம் வாஜ்பாய் அரசால் முன்மொழியப்பட்டது? அப்போது தெரியாதா இது ராமர் பாலம் என்று?

காங்கிரஸுக்கோ புலிவால் பிடிக்க பயம். திமுக போன்ற தைரியம் அதற்கு இல்லை. எதை எதையோ சொல்லி, பிரச்சனை தங்கள் தலைமேல் விழாமல், ராமர்பாலம் இடித்த தோஷம் தங்கள் மேல் வராமல் இருந்தாலே போதும் என்று அம்பிகா சோனியை காவுகொடுக்கவும் தயாராகிவிட்டது. சும்மாவா? திமுக போல இந்துத்துவ எதிர்ப்பால் பாதிப்பு வராது என்ற நிலைமையா இருக்கிறது? கொஞ்சம் கேப் விட்டால் பாஜக புகுந்து புறப்பட்டு விடுமே..

நம் லோக்கல் அரசியல்வாதிகள் நிலைமை தமாஷாக இருக்கிறது.

சேது சமுத்திரத்திட்டத்தால் வோட்டு வரும்போல இருக்கிறதே.. ஆதரிப்போம்..
அட.. அது திமுகவுக்கு சாதகமாக ஆகும் போலிருக்கிறதே.. மீனவர்கள் நலம் நாசம் என கொடி பிடிப்போம்..
நாசா படம் வெளியிட்டிருக்கிறதே.. ஆமாம் ராமர்தான் கட்டினார் அதை.. மத உணர்ச்சிக்குத் தூபம் போடுவோம்..

இதுதான் அதிமுக நிலைமை! நேரில் மடக்கி.. இப்ப என்னதாங்க சொல்றீங்க, "சேது சமுத்திரம் வேணுமா வேணாமா" என்று கேட்டால் பதில் வராது!

ஆதரவு எதிர்ப்பு இரண்டும் இல்லாமல் ஒரு வழவழா கொழகொழா நிலையும் இருக்கிறது, அது புதுக்கட்சிக்காரர்களுக்கு.

மாற்றுப்பாதையில் ராமர்பாலத்தை இடிக்காமல் போடட்டுமே! அடப்பாவிகளா.. மாற்றுப்பாதை சுற்றுவழியாக இருக்கிறது என்பதால்தானே இந்த வழியே போடுகிறார்கள்!

ராமர் பாலத்தை மறுக்கும், அதே நேரத்தில் சேது சமுத்திரத்தையும் எதிர்க்கும் ஒரு கோஷ்டியும் நடுவில் உலாவுகிரது. இந்தக் குழு பரவாயில்லை, அடிக்கடி கொள்கையை மாற்றிக்கொள்வதில்லை, கொஞ்சம் நம்பலாம். சுற்றுச்சூழல், கனிமவளம் போன்ற காரணங்களால் எதிர்க்கிறது.

திமுக இப்போது தனித்துவிடப் பட்டிருக்கிறது. டெல்லி காங்கிரஸ் கைகழுவிவிட்டது.

ஆனால், இந்த அரசியல் நிலைப்பாடுகள் எல்லா விஷயத்துக்கும் பொது, எதுவும் புதிதில்லை, இந்த நாற்றம் மூக்குக்குப் பழகிவிட்டது!

பெரும் நாற்றம் அறிக்கைப்போரினால்!

வெளிப்படையாக ஒரு மத நம்பிக்கையைக் குறைபேசும் முதல்வர் பிரச்சனையை ஆரம்பித்துவைக்க,

அவர் தலைக்கு ஒரு விலை வைக்கும் மதவாதம்! எவ்வளவு கேவலம்! உங்கள் வீடியோவைப்பார்த்து எத்தனையோ பேர் உங்கள் தலைக்கு விலை வைக்கலாமே! நீங்கள் இடிக்காத மதநம்பிக்கைகளா?

ராமரின் சர்ட்டிபிகேட் கேட்கும் திமுக, திருவள்ளுவரின் சர்ட்டிபிகேட்டை பார்த்திருக்கிறார்களா என்று நியாயமான கேள்வி கேட்ட விஜயகாந்தின் பூர்வீகம் அவசர அவசரமாக ஆராயப்படுகிறது! அவர் தலைக்கு விலைவைக்கும் ஆவல் தெரிகிறது!

மொத்தத்தில், ஒரு சாதாரண பொருளாதார முன்னேற்ற திட்டம், படிப்படியாக உணர்ச்சிகளின் கூடாரமாக்கப்படுகிறது! இதற்குள் இதற்கு 300 கோடி ரூபாய் செலவும் ஆகிவிட்டிருக்கிறதாம். (ஜூவி செய்தி)!

என் கருத்தா? சேது சமுத்திரத்திட்டம் கனிமவளம், சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களைத் தவிர்த்து, வேறெந்தக் காரணங்களாலும் கைவிடப்படக்கூடாது. புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்பது அரசு தரப்பால் தெளிவாக்கப்பட்டபிறகே தொடரப்படவேண்டும், வெள்ளை யானையாக இருந்தாலும் ஈகோவுக்காக தொடரப்படக்கூடாது!

பெரிய ஆசைகள் -- இன்றைய நாற்றமெடுத்த சூழலில்!

0 comments: