September 21, 2007

ராமர்: அதிகரிக்கும் எதிர்ப்பு- காங். அதிர்ச்சி, பதவியிழக்கிறார் அம்பிகா சோனி?

ராமர்: அதிகரிக்கும் எதிர்ப்பு- காங். அதிர்ச்சி, பதவியிழக்கிறார் அம்பிகா சோனி?
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2007


டெல்லி:

ராமர் பால வழக்கு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை விஸ்வரூபம் எடுத்து வருவதால், கட்சியின் பெயரைக் காப்பாற்றும் வகையில் கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனியின் பதவியை பறிக்க காங்கிரஸ் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அம்பிகா சோனி வசம் உள்ள கலாச்சாரத் துறையின் கீழ் வரும் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில் ராமர் குறித்துத் தாக்கல் செய்த அபிடவிட் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்தப் பிரச்சினையில், அம்பிகா சோனி ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால் சோனியா காந்தியின் நிழலாக கூறப்படும் அம்பிகா இதை ஏற்கவில்லை.

இந்த நிலையில் நேற்று பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் அம்பிகா. பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பாக எனது கருத்துக்களைப் பிரதமரிடத்தில் தெரிவித்தேன் என்றார்.

அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் வீடு திரும்பியதைத் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார் அம்பிகா சோனி.

ஆனால் ராமர் அபிடவிட் பிரச்சினை எதிர்பார்த்ததை விட படு வேகமாக விஸ்வரூபம் எடுத்து வருவதும், உலகெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி குறித்து பெரும் அதிருப்தி உருவாகி வருவதும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இதற்கு முன்பு இந்து சமுதாயத்தினர் குறித்து காங்கிரஸ் கட்சி பாரபட்சமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்தபோதெல்லாம் அதை காங்கிரஸ் கட்சி பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் இந்த முறை எழுந்துள்ள சர்ச்சை, இந்துக்களின் மத நம்பிக்கையின் அடிப்படையையே ஆட்டிப் பார்க்கும் செயலாக மாறிப் போயுள்ளதை காங்கிரஸ் கட்சி சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

ராமர் பிரச்சினையில், ஏதாவது உறுதியான நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் இந்துக்களின் வாக்கு வங்கி தங்களை விட்டு விலகிப் போய் விடக் கூடும் என்ற பயமும் காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ளது.

மேலும் குஜராத் மற்றும் சில வட மாநிலங்களில் விரைவில் வரப் போகும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அடி விழக் கூடும் என்ற அச்சமும் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே குஜராத்தில் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு குறைந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது பெரும் ஆயுதமாக ராமர் கிடைத்துள்ளார். இதை வைத்து காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டம் கொடுக்க கொடுக்க மோடி ரெடியாகி விட்டார். இதனால் காங்கிரஸ் கலங்கிப் போயுள்ளது.

நடந்து நடந்து விட்டது. இதை சரிக் கட்ட, சரிந்து போய் விட்ட கட்சியின் பெயரைக் காப்பாற்ற யாரையாவது பலி கொடுத்தாக வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது. விவகாரத்திற்குக் காரணமான அறிக்கையை தாக்கல் செய்த தொல்பொருள் துறை, கலாச்சாரத் துறையின் கீழ் தான் வருகிறது. அத்துறை அமைச்சர் அம்பிகா சோனி மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கோபத்தில் உள்ளார்.

பிரச்சினை வெடித்தவுடன் அதை சரிக்கட்டும் முயற்சியில் சோனி இறங்கவில்லை. மாறாக, சக அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்தபோது, இவர் யார் சொல்வதற்கு, சோனியா காந்தி சொல்லட்டும், ராஜினாமா செய்கிறேன் என்று கடும் கோபமாக பதிலளித்திருந்தார் சோனி.

இதுதான் பிரச்சினையை மேலும் பெரிதாக்கி விட்டது. நடந்ததற்கு பொறுப்பேற்று அம்பிகா சோனி, மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவித்திருந்தால் நிலைமை இவ்வளவு சிக்கலாகியிருக்காது. அதை விடுத்து சோனியா சொன்னால்தான் செய்வேன் என்று சோனி கூறியதை காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்ேபாதைய சூழ்நிலையில் அம்பிகா சோனியை பதவியிலிருந்து நீக்குவது மட்டுமே நிலைமையின் தீவிரத்தைத் தணிக்க உதவும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு மூத்த தலைவர்கள் பலரும் ஆலோசனை கூறியிருப்பதாக தெரிகிறது.

மேலும் பிரதமரை சந்தித்து விட்டு வந்த அம்பிகா சோனியின் முகத்தில் ஒரு தெளிவு இல்லை, மாறாக அப்செட்டுடன் காணப்பட்டார். எனவே அவரது பதவிக்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டது, விரைவில் அவர் பதவியை இழப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சோனியை தூக்கும் முடிவுக்கு காங்கிரஸ் தலைமை வந்துள்ளதற்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரே ஆவேசமாக அவருக்கு எதிராக பேசி வருவதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஜெயராம் ரமேஷ் தவிர, சோனியா காந்திக்கு நெருக்கமான இன்னொரு தலைவரான ஆர்.கே.தவனும், அம்பிகா சோனிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இதனால்தான் அம்பிகாவை பலிகடாவாக்க காங்கிரஸ் தலைமை தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேசமயம், பிரச்சினையைத் தணிக்காமல் தொடர்ந்து ராமர் குறித்து தவறாகவே பேசி வரும் முதல்வர் கருணாநிதி மீதும் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால் கருணாநிதியிடம் போய் எப்படி எடுத்துச் சொல்லி அமைதி காக்குமாறு அட்வைஸ் செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளது காங்கிரஸ்.

0 comments: