October 2, 2007

ராமரை ஏன் கெட்ட விஷயங்களுக்கே பயன்படுத்துகிறீர்கள்? - கருணாநிதி கேள்வி

ராமரை ஏன் கெட்ட விஷயங்களுக்கே பயன்படுத்துகிறீர்கள்? - கருணாநிதி கேள்வி

சென்னை:

பாபர் மசூதியை இடிக்க ராமர், சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்த ராமர் என ஏன் ராமர் பெயரை கெட்ட விஷயங்களுக்கே இழுக்கிறீர்கள், நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தக் கூடாதா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி நேற்று சென்னையில் திமுக கூட்டணி சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், இத்திட்டம் 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு, உருப்படியாக உருவாக்கப்படவில்லை. இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1981ல் இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சி கொடுத்தது.

இருப்பினும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு திட்டத்திற்கான உரிய கவனத்தை முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை.

பாஜக - திமுக அரசின் பிரதமர் வாஜ்பாய் சென்னைக்கு வந்தபோது சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

ஆனால் நடந்தது என்னவென்றால், ஏற்கனவே பலமுறை ஆய்வு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்யப் போகிறோம் என்றனரே தவிர இந்த்த திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால்,நமது நாடு மட்டுமல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோர பகுதியில் உள்ள அனைத்து நாடுகளும் பயனடைவார்கள். வர்த்தகம் பெருகும். ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும்.

ஒரு காலக்கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை விடாது வலியுறுத்துவோம்.

இதை நான் சொல்லவில்லை. அதிமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா சொல்லியது இது. அவர்கள்தான் இன்று இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கட்சியின் அவைத் தலைவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி நடத்த இருந்த அறப் போராட்டத்தை, கடையடைப்புப் போராட்டத்தை தடுத்திருக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். நீதிமன்றத் தடையில்லை, தோழமைக் கட்சிகள் நடத்தலாம் என்று கூறியிருந்தால் மகிழ்ச்சி. நடத்த வேண்டாம் என்று கூறியிருந்தால் மகிழ்ச்சி. நடத்தலாம் என்று கூறியிருந்தால் சட்டம் ஒழுங்கை மீறக் கூடாது என்று அரசை எச்சரித்திருப்பார்கள்.

தடை இல்லாமல் நடத்திக் கொள்லளாம் என்று கூறியிருந்தால், நாம் வெற்றிகரமாக அமைதியாக நடத்தியிருந்தாலும், ஒரு நான்கு பேர் இவ்வளவு நடந்தது என்று டெல்லிக்குப் போவார்கள். இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கடிதம் கொடுப்பதற்காக.

சேது கால்வாயில் மூன்றில் இரண்டு பங்கு தோண்டி முடிக்கப்பட்டு, 2462 கோடி ரூபாய் திட்ட மதிப்பிலே பெரும்பகுதி பணம் செலவழிக்கப்பட்டு திட்டம் உரிய காலத்தில் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் எடுக்கப்படும் முயற்சிகள் உறுதியுடன் ஒடுக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை பெருமக்களாகிய நீங்கள்தான் சிந்தித்துப் பார்த்து உள்ளத்திற்குள் பதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.

பாபர் மசூதியை இடிக்கவும் ராமர் பெயர், சேது திட்டத்தை எதிர்க்கவும் ராமர் பெயர்தானா. ராமரை ஏன் இந்த பாடுபடுத்துகிறீர்கள். ஏன் இப்படி ராமரை பலிகடாவுக்குகிறீர்கள். கெட்ட காரியத்துக்குப் பயன்படுத்தும் பெயரை நல்ல காரியத்துக்கு பயன்படுத்தக் கூடாதா.

இந்த மதவெறியை மாய்ப்பதுதான் இங்கே இருக்கிற கட்சித் தலைவர்களின் நோக்கம், குறிக்கோள். அதை முடிக்கும் வரை ஓய மாட்டோம். உறங்க மாட்டோம் என்றார் கருணாநிதி.

என்ன வந்து விடப் போகிறது?- தா.பாண்டியன்:

இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில், இந்தத் திட்டம் கனவாகிப் போய் விடாது. இந்த்த திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி நாளை (இன்று) ஒரு வாகனமும் ஓடப் போவதில்லை. ஒரு காக்கா கூட இயங்காமல் நிறுத்திக் காட்டுவோம். அமைதியான முறையில் இந்தப் போராட்டம் நடைபெறும்.

கடலில் எடுக்கப்படும் மணலை கடலிலேயே கொட்டி விடுவோம் என மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. நிபுணர்கள் கூறிய 6 தடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் தற்போதைய திட்டம். அதை மாற்றுவது கடினம்.

3000 மீட்டர் நீளமுள்ள பாலத்தில் 300 அடியை இடித்தால் போதும். இதில் என்ன வந்து விடப் போகிறது என்று கோபமாக கேட்டார் தா.பாண்டியன்.

விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் பேசுகையில், இந்தியாவில் மீண்டும் சித்தாந்தப் போர் தெடாங்கியுள்ளது. ராமர் பாலம் என்று கூறப்படும் பாலத்தை தேவைப்பட்டால் குண்டு வைத்துத் தகர்ப்போம். முதுபெரும் வயதில் உடலை வருத்திக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலைஞர் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

இதேபோல கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் கருணாநிதியை, உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கோரினர்.



0 comments: