சென்னையில் ரவுடிகள் வேட்டை ஒரே நாளில் 1000 பேர் வளைப்பு
சென்னை:சென்னை நகரில் போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் 63 பிரபல ரவுடிகள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர்.சென்னை நகரில் சமீபத்தில் சில என்கவுண்டர்கள் நடந்தது. முக்கியமான பங்க் குமார், வெள்ளை ரவி ஆகிய பிரபல தாதாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில் சின்னச் சின்ன ரவுடிகளையும், பழைய குற்றவாளிகளையும் வளைத்துப் பிடித்துப் போடும் நடவடிக்கையை சென்னை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.அதன்படி தற்போது நள்ளிரவு நேரங்களில் நகர் முழுவதும் போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி ஆங்காங்கு ரெய்டுகளை நடத்தி ரவுடிகளை வளைத்துப் பிடித்து வருகின்றனர்.2 நாட்களுக்கு முன்பு நடந்த அதிரடி வேட்டையில் சில பிரபல ரவுடிகள் உள்பட 1035 பேர் சிக்கினர். இந்த ரவுடி வேட்டையில் மொத்தம் 444 ரோந்துப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். நகர் முழுவதும் சல்லடை போட்டு ரவுடிகளையும், சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்டவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.இவர்களில் 63 பேர் ரவுடிகள் ஆவர். 111 பேர் பழைய குற்றவாளிகள். 39 பேர் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள். இதுதவிர மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டியதாக 93 பேர் பிடிபட்டனர்.ஸ்டோர்மிங் ஆபரேஷன் என பெயரிடப்பட்டுள்ள இந்த நள்ளிரவு வேட்டை தொடரும் எனவும், ரவுடிகளின் கொட்டம் முழுமையாக அடக்கப்படும் எனவும் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.இதுதவிர ஹெல்மட் அணியாமல் சென்றதாக 1379 பேர் பிடிபட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment