October 9, 2007

பெரியகுளம் அருகே பயங்கர கலவரம்: போலீஸ் துப்பாக்கிச் சூடு-4 பேர் காயம்

பெரியகுளம் அருகே பயங்கர கலவரம்: போலீஸ் துப்பாக்கிச் சூடு-4 பேர் காயம்
பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தலித் வகுப்பைச் சேர்ந்த இரு பிரிவினருக்கிடையே பயங்கர மோதல் மூண்டது. இரு தரப்பினரும் கற்கள், அரிவாள்களால் தாக்கிக் கொண்டனர். போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுளை வீசியும் கலவரத்தை அடக்கினர்.பெரியகுளம், ஜெயமங்கலம் அருகே நடுப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. தலித் சமூகத்தினர் இந்தக் கோவிலில் வழிபட்டு வருகிறார்கள். அப்பகுதியில் பிரபலமான இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் விழா எடுக்கப்பட்டு, சாமி வேடம் பூண்டு ஊர்வலமும் நடைபெறும்.சாமி வேடம் பூண்டு ஊர்வலம் நடத்துவதில் நடுப்பட்டி மற்றும் சிண்டுவம்பட்டி கிராம மக்களுக்கிடையே பிரச்சினை எழுந்ததால், ஊர்வலத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழா நேற்று நடந்தது. அப்போது சிண்டுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தினர் திடீரென சாமி வேடம் போட்டு ஊர்வலமாக கிளம்பினர்.இதைப் பார்த்த நடுப்பட்டி கிராமத்தினர் ஆத்திரமடைந்து சிண்டுவம்பட்டி கிராமத்தினருடன் மோதலில் இறங்கினர். கல்வீச்சில் தொடங்கிய மோதல் பின்னர் அரிவாள்களுடன் பெரும் மோதலமாக மாறியது.இதையடுத்து ஆயுதப் படை போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இரு கிராமங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கம்பு, அரிவாள்களுடன் துரத்தி துரத்தி மோதிக் கொண்டதால் அப்பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது.கலவரத்தை அடக்க வந்த போலீஸாரையும் கிராமத்தினர் தாக்க முயன்றதால் நிலைமை மோசமானது. இதையடுத்து தடியடி நடத்தப்பட்டது. அப்படியும் கூட்டம் கலையாததால் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போலீஸார் கலைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.இந்த மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த இடத்தை தென் பிராந்திய ஐஜி சஞ்சீவ் குமார் நேரில் வந்து பார்த்தார். டிஐஜி கிருஷ்ணமூர்த்தியும் விரைந்து வந்தார்.வன்முறை தொடர்பாக 7 பேர் கைது செயய்ப்பட்டுள்ளனர். இரு கிராம மக்களிடையேயும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 comments: