October 9, 2007

மக்களின் தீர்ப்பை மதிக்காவிட்டால்... ராமதாஸ் எச்சரிக்கை

மக்களின் தீர்ப்பை மதிக்காவிட்டால்... ராமதாஸ் எச்சரிக்கை
விழுப்புரம்:மரக்காணம் பகுதியில் அனல்மின் நிலையம் அமைப்பது குறித்து மக்களின் தீர்ப்பை கருணாநிதி மதிக்காவிட்டால், தமிழக அரசை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மரக்காணம் பகுதியில் அனல்மின் நிலையம் அமைய இருப்பது குறித்து ராமதாஸ் அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டார். பின்னர் அவர் பேசியதாவது,இங்கு நான் கருத்து கேட்பதற்கு பாமக சார்பில் வரவில்லை. அண்மையில் நான் துவக்கிய தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் விவசாய குடும்பங்களை சந்திக்க வந்துள்ளேன். அனல்மின் நிலையம் அமைக்க, விவசாய விளை நிலங்களை மத்திய, மாநில அரசுகள் கையகப்படுத்தக் கூடாது.தொழிற்சாலைகளை அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று ஏற்கனவே தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த விஷயத்தில் ராமதாசின் கருத்தே எனது கருத்து என்றும் அவர் ஏற்கனவே கூறியுள்ளார்.இப்பகுதி விவசாயிகளுக்கு மின்சாரம் வேண்டும். ஆனால் விவசாயிகளுக்கு வாழ்க்கை தரும் விளை நிலங்களை அழித்துவிட்டு அனல்மின் நிலையம் துவக்கக் கூடாது. எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலங்களைத் தருவதற்கு விவசாயிகள் தயாராக இல்லை.பாரம்பரியமாக வாழும் கிராமங்களை அழித்து மக்களின் வாழ்வாதரத்தைக் கெடுத்து அதனால் வரப்போகும் முன்னேற்றம் தேவையில்லை. வெளிநாட்டுக்காரனை கூட்டி வந்து அங்கு அமைக்கும் அனல்மின் நிலைத்திற்கு நிலம் தந்தவர்களுக்கு வேலை தருவோம் என்பது மக்களை ஏமாற்றும் வேலை.நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு இதுவரை வேலை தரவில்லை. மரக்காணம் வட்டாரத்தில் அதிகம் படித்த இளைஞர்கள் யாருமில்லை. இங்கு நிலம் தந்தால் விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலை தருவது நிச்சயமில்லை.அப்படியே வேலை கொடுத்தாலும் அதிகம் படிக்காதவர்களுக்கு என்ன வேலை தரப்போகிறார்கள். வேலை தருவதாகக் கூறுவது பித்தலாட்டம். ஆகவே நிலங்களை அரசு கையகப்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும், நிலங்களைத் தரமாட்டோம் என்றும் ஒவ்வொரு ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றி அதை அரசுக்கு அனுப்பி வைக்க உடனடி நடவடிக்கை எடுங்கள்.மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை முதல்வர் கருணாநிதி மதித்து நடந்து கொள்வார் என்று நம்புகிறேன். அவர் மதிக்காவிட்டால், விவசாய விளைநிலத்தில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து நான் போராட்டம் நடத்துவேன்.கந்தாடு பகுதியில் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட தரிசு நிலங்கள் உள்ளன. அங்கு அனல்மின் நிலையம் அமைக்காமல், விளை நிலங்களை அழிப்பதை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்பேன் என்று ராமதாஸ் பேசினார்.

0 comments: