October 21, 2007

கோவை: கட்டிட விபத்து பலி 12 ஆக உயர்வு

கோவை:

கோவை உக்கடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் 3 பேர் பெண்கள். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உக்கடம் பஸ் நிலையம் அருகே கடந்த 1971ம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இதில் ஏ பிளாக்கில் மொத்தம் 25 வீடுகள் இருந்தன. நான்கு மாடிக் கட்டடம் இது.

இந்தக் கட்டடம் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிய நிலையில் மிகவும் பாழடைந்து சிதிலமான நிலையில் காணப்பட்டது. எனவே இங்கு குடியிருப்பது ஆபத்தானது என்று வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஏற்கனவே இங்கு குடியிருந்தவர்களிடம் எச்சரித்து காலி செய்யும்படி கூறியிருந்தனர்.

ஆனால் குடியிருந்தவர்களில் பலர் காலி செய்யாமல் தொடர்ந்து வசித்து வந்தனர். இந்த நிலையில் கோவையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால் உக்கடம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வீடுகளில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் இறங்கினர்.

நேற்று காலை முதலே இந்தப் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் மாலையில் திடீரென நான்கு மாடிக் கட்டடம் அப்படியே பொலபொலவென இடிந்து தரைமட்டமானது.

இதில் வீடுளைக் காலி செய்து கொண்டிருந்த பலர் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புப் படையினர், போலீஸார், பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை ஜெய்னுலாப்தீன் (25), ரபீக் (24), திணேஷ் (20), அப்துல் கபீர் (30), ரமேஷ் (35), 10 வயது சிறுவன், துளசி, யாஸ்மின், நீலவேணி உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல், மாநகர காவல்துறை ஆணையர் காந்திராஜன் உள்ளிட்டோர் நேரடியாக மீட்புப் பணிகளைப் பார்வையிட்னர்.

மழை தொடர்ந்து பெய்து வந்ததால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் அனைவரும் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். மீட்புப் பணியில் விரைவு அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். 6 பொக்லைன் எந்திரங்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்த குடியிருப்பில் மொத்தம் 100 பேர் வரை குடியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் காலையிலேயே வீடுகளைக் காலி செய்து விட்டனர். 30 பேர் வரை மட்டும் இருந்தனர். இவர்களில் பலர் டிவி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதற்காக வீடுகளில் இருந்தபோதுதான் இந்த விபரீதத்தில் சிக்கிக் கொண்டனர்.

இறந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம்:

இதற்கிடையே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25,000மும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

0 comments: