சிவாஜி கணேசன் மனைவி மரணம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாள். சிவாஜி கணேசன் இறந்தது முதலே அவருடைய நினைவாக சோகத்துடன் இருந்து வந்தார். வெளி நிகழ்ச்சிகள் எதிலும் அவர் பங்கேற்பதில்லை.
சென்னை கடற்கரையில் நடந்த சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழா மற்றும் சந்திரமுகி படத்தின் வெற்றி விழா ஆகியவற்றில் மட்டுமே அவர் பங்கு கொண்டார்.
வீட்டோடு இருந்து வந்த கமலா அம்மாளுக்கு சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்தது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மரணமடைந்தார்.
கமலா அம்மாளுக்கு வயது 68. அவருக்கு நடிகர் பிரபு, தயாரிப்பாளரான ராம்குமார் என இரு மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
காலை 10.50 மணிக்கு கமலா அம்மாள் உயிர் பிரிந்தபோது குடும்பத்தினர் அனைவரும் அருகிலேயே இருந்தனர்.
அவரது உடல் தி.நகர் போக் சாலையில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கமலா அம்மாள் மறைவுச் செய்தியைக் கேட்டதும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
சிவாஜி கணேசன் வீட்டில் திரையுலகினர் பலரும் திரண்டுள்ளனர். கமலா அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை இறுதிச் சடங்கு:
சிவாஜி - கமலா அம்மாள் தம்பதியின் இரு மகள்களான சாந்தியும், தேன்மொழியும் தற்போது வெளிநாடு சென்றுள்ளனர். அவர்களுக்கு தாயின் மரணச் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர்.
அவர்கள் வந்தவுடன் நாளை மாலை அல்லது ஞாயிற்றுக்கிழமை கமலா அம்மாளின் இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். இங்குதான் சிவாஜி கணேசனின் உடலும் தகனம் செய்யப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
கண்ணீர் அஞ்சலி:
கமலா அம்மாளின் உடலுக்கு முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், பல்துறை பிரமுகர்கள் என சகல தரப்பினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திரையுலகமே திரண்டு வந்து கமலா அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தியது.
சிவாஜி கணேசனுக்கும், கமலா அம்மாளுக்கும் 1952ம் ஆண்டு மே 1ம் தேதி தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் திருமணம் நடந்தது. முதல்வர் கருணாநிதிதான் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர், கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment