சென்னை: போலியான பெயரில் விமானத்தில் சென்னைக்கு வந்து மனைவியை ெகாலை செய்துவிட்டு டெல்லிக்குத் தப்பிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன் நடந்த கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூரைச் சேர்ந்த மத்தியப் படையில் பணியாற்றும் போலீஸ்காரர் சுதாகர். இவருக்கும் விஜயலட்சுமிக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆவடி அருகே உள்ள வெங்கலில் வசித்து வந்தனர். இந்தத் தம்பதிக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.
திருமணத்துக்குப் பின் சுதாகர் டெல்லிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந் நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. மேலும் விஜயலட்சுமியின் நடத்தையிலும் சுதாகருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந் நிலையில் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் சுதாகர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வேறு ஒருவரது பெயரில் சுதாகர் விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்ற அவர், விஜயலட்சுமியை அடித்து கொலை செய்தார்.
பிறகு நண்பர் ஒருவர் உதவியுடன் விஜயலட்சுமி உடலை சாக்கு மூட்டையில் கட்டி மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று வெங்கல் கூட்டு ரோடு மேம்பாலத்தின் கீழ் ஒரு குழாய்க்குள் பிணத்தை திணித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
தனது வயது குழந்தையை கொல்ல மனம் இல்லாததால் சுதாகர், குழந்தையை அம்பத்தூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் முன் போட்டுவிட்டு மீண்டும் விமானத்தில் டெல்லிக்கு சென்று விட்டார்.
அந்தக் குழந்தையின் படம் பத்திரிக்கைகளில் வெளியானதைக் கண்டு, விஜயலட்சுமியின் தாயார் ஓடி வந்தார். இது தனது பேத்தி என்று சொல்லி குழந்தையை தூக்கிச் சென்றார்.
ஆனால், விஜயலட்சுமி குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து விஜயலட்சுமியின் பெற்றோர் சுதாகருக்கு தகவல் தந்தனர். அவரும் டெல்லியில் இருந்து அப்போது தான் வருவது போல நடித்தார்.
குழந்தையை வாரி அணைத்து ெகாஞ்சினார். மனைவியைக் காணவில்லையே என அழுதார். பின்னர் விஜயலட்சுமியின் பெற்றோருடன் காவல் நிலையத்துப் போய் மனைவியைக் காணவில்லை என புகார் கொடுத்தார்.
குழந்தையை அதன் பாட்டியிடமே விட்டுவிட்டு மீண்டும் டெல்லிக்கே சென்று விட்டார்.
இந் நிலையில் குழாயில் திணித்து வைக்கப்பட்ட விஜயலட்சுமியின் உடல் சில வாரங்களில் அழுகிவிட்டது. எலும்புக் கூடாக மாறிவிட்ட நிலையில் அதைப் பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் தந்தனர். போலீசார் அங்கு சென்று எலும்புக் கூடை கைப்பற்றினர்.
அதை பிரேதப் பரிசோதனை செய்தபோது அது விஜயலட்சுமியின் உடலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து விசாரணை சூடு பிடித்தது. சுதாகர் மீதே சந்தேகம் கொண்ட போலீசார் அதைக் காட்டிக் கொள்ளாமல் விசாரித்தபோது சுதாகருக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே தகராறு நடப்பது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அம்பத்தூர் அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் ஜோஷி நிர்மல்குமார், சுதாகரை டெல்லியில் வைத்தே கண்காணிக்க உத்தரவிட்டார். இதையடுத்து தனிப் படை அங்கு விரைந்தது. அவரது அலுவலகத்தில் விசாரணை நடத்தியது.
அதில், விஜயலட்சுமி காணாமல் போன தினத்தில் சுதாகர் டெல்லியில் பணிக்கு வரவில்லை என்று தெரியவந்தது. ஏதோ பொறி தட்டவே, சுதாகரை தனிப்படை போலீசார் சென்னைக்கு கொண்டு வந்தனர்.
தனி இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போலி பெயரில் விமானத்தில் வந்து மனைவியை கொலை செய்து விட்டு விமானத்தில் அதே தினத்தில் திரும்பியதை ஒப்புக் கொண்டார் சுதாகர்.இதையடுத்து இன்று அவர் கைது செய்யப்பட்டார்.