February 19, 2008

25 வருடமாக பஸ்ஸையே பார்த்திராத வெண்மணி கிராமம்

நாகப்பட்டிணம்: நாகை மாவட்டம் வெண்மணி கிராம மக்கள் கடந்த 25 வருடங்களாக பேருந்து வசதியே இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் கோட்டத்திற்கு உட்பட்ட குக்கிராமம்தான் வெண்மணி. இது கீழ வெண்மணி, மேல வெண்மணி என இரண்டு பகுதிகளாக உள்ளது.

கீழ வெண்மணி கிராமத்தில் கடந்த 1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி, கூலியை உயர்த்திக் கேட்டதற்காக 44 அப்பாவி தலித் விவசாயக் கூலிகள் உயிரோடு வைத்துக் கொளுத்தப்பட்ட கொடூரம் நடந்தது.

இன்று மேல வெண்மணி கிராமத்து மக்கள் இன்னொரு பிரச்சினையில் சிக்கி பெரும் கஷ்டத்தில் மூழ்கியுள்ளனர். இக்கிராமத்தைச் சுற்றிலும் பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன.

ஆனால் இந்தக் கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியே இல்லை. கிட்டத்தட்ட 25 வருடங்களாக பஸ் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் இப்பகுதி கிராம மக்கள்.

இதுதொடர்பாக ஆட்சித் தலைவர், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள் என பலரிடமும் முறையிட்டும் அனைத்துமே செவிடன் காதில் ஊதிய சங்காகவே போய் விட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், கூலி வேலைக்காக நெடுந்தூரம் போகும் தொழிலாளர்கள் என பல தரப்பினரும் பஸ் இல்லாமல் பெரும் அவதிப்படுகின்றனர்.

பல கிலோமீட்டர் தூரம் நடந்தால்தான் பஸ்ஸையே பார்க்க முடியும். உடல் நலம் சரியில்லாவிட்டால் நிலைமை அதோ கதிதான். மெயின் ரோட்டுக்குச் செல்வதற்குள் பல உயிர்கள் பறிபோயுள்ள அகோரமும் நடந்துள்ளதாம்.

இத்தனை காலமாக பஸ் வசதி கேட்டு பலமுறைகளிலும் போராடிப் பார்த்து விட்ட மேல வெண்மணி கிராம மக்கள் நேற்று 700 பேருக்கும் மேல் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீஸார் கலைந்து போகுமாறு கூறினர்.

ஆனால் சாலை வசதிக்கு உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்று கிராம மக்கள் கூறினர். இதையடுத்து போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

0 comments: